Sunday, May 24, 2015

Tears of Hardship A Painting by Shameela Yoosuf Ali


சிந்தனைகள் அகலப்படட்டும்.


Shameela Yoosuf Ali

எனக்கென்றோர் உலகம் 9


அனேகமான மேலைத்தேய சிந்தனைவாதிகளால் பேசப்படுகின்ற பெண்ணியத்திற்கும் நாம் முன்வைக்கும் பெண் வளவாக்கம் என்னும் கருத்தியலுக்கும் நிறையவே வித்தியாசம் இருப்பதை உணர்ந்துகொள்ள முடியும்.

மேலைத்தேயப் பெண்ணியம் மிகுந்த சிக்கல்வாய்ந்த ஒரு கூட்டுத்தொகுதியாகும். அங்கே தெரிவிக்கப்படுகின்ற மூலதத்துவங்கள் சிலபோது பெண்களை அசிங்கப்படுத்துவதாகவும் அமைந்துவிடுகின்றன. “பெண்ணுரிமை” என்று பேசும் சில பெண்ணியவாதிகள் ஆண்களோடு போட்டி போடுவதையும், ஆண்களை எதிரிகளாகப் பார்ப்பதையுமே பெண்ணுரிமை என்ற தவறுதலான புரிதலைப் புகுத்தி வருகிறார்கள்.

அதாவது பெண்ணுரிமை என்பது ஆணுக்கும் பெண்ணுக்குமான முடிவுறாப்போராட்டமாக சித்தரிக்கப்படுகின்றது. தங்களது விருப்பங்களை வெளிக்காட்டவோ அல்லது இறைவன் தந்திருக்கும் உரிமையொன்றை பெற்றுக்கொள்ளவோ தடை ஏற்படுத்தும் அல்லது மறுக்கும் அல்லது எதிர்க்கும் ஆதிக்க மனப்பான்மை தான் எதிர்க்கப்பட வேண்டியது. இந்த ஆதிக்க மனப்பான்மை ஆண்களிடத்தில் இருந்தாலும் சரி, பெண்களிடத்தில் இருந்தாலும் சரி.

மேலைத்தேயப் பெண்ணியம் பேசும் எல்லாக் கருத்துகளுடனும் நாம் உடன்படுகின்றோம் என்றோ அல்லது முழுமையாக முரண்படுகின்றோம் என்றோ அர்த்தம் கொள்தல் ஆகாது.

*மேலைத்தேய பெண்ணியம் சார்ந்த கருத்துகளோடு எம்மால் உடன்பட முடியாமைக்கான காரணிகளாக பின்வருவனவற்றை அடையாளம் செய்ய முடியும்.

*தெய்வீக வழிகாட்டல் இன்மை- அதாவது வஹியின் வழிகாட்டல் இன்மை.

*முதலாளித்துவ, அல்லது சமவுடமைவாத வர்த்தக மயப்படுத்தப்பட்ட தன்மை.

*ஆண்-பெண் முரண்பாட்டினைத்தோற்றுவிக்கஏதுவாக செயற்படுதல்

*பெண்மையின் இயல்புகளை மறுதலிக்கின்ற தன்மை

சிலபோது நாம் மேலைத்தேய பெண்ணிய கருத்துகளோடு உடன்படுகின்றோம். அது, பெண்ணியம் சார் கருத்துக்கள் இறை வழிகாட்டலின் அடிப்படையிலான பெண் மேம்பாடு, பெண் பாதுகாப்பு சார்ந்த கருத்துகளோடு உடன்பட்டு இயைந்து செல்கின்ற போதாகும்.

பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற எல்லா விதமான வன்முறைகளையும் இன மத தேச வேறுபாடுகளைக் கடந்து எதிர்க்கின்றோம் கண்டிக்கின்றோம்.உலகளாவிய ரீதியில் பெண்களின் அடைவுகளை மெச்சுகின்றோம். வாழ்த்துகின்றோம், துணை நிற்கின்றோம். இதுவே மேலைத்தேய பெண்ணியம் சார் ஒரு முஸ்லிமின் நிலைப்பாடாகும்,

எமது பெண் மேம்பாடு குறித்து சிந்தித்துச் செல்கையில் ஒரு பெண்ணுக்கு பின்வரும் வாய்ப்புக்கள் தடையின்றி வழங்கப்படல் வேண்டும்.

* கல்வி கற்றல் சுதந்திரம் (அடிப்படை ஆரம்ப கல்வி, உயர் கல்வி, பட்டப்படிப்பு, பட்டமேல் படிப்பு, தொழில் சார் கல்வி).

* திறன்களை விருத்தி செய்வதில் முழுமையான சுதந்திரம் (விளையாட்டு, தலைமைத்துவம், தொடர்பாடல், முகாமைத்துவம், போன்ற எல்லாத்துறைகளிலும்)

* முழுமையான தொழில் சார் உரிமை வழங்கப்படவேண்டும், தனது இயல்புக்கும் மார்க்கத்தின் வரையறைகளையும் பேணும் நிலையில் அவள் விரும்பும், அவளுக்கு இயலுமான தொழிலை மேற்கொள்வதற்கும் அதனால் ஈட்டப்படும் வருவாயை பெற்றுக்கொள்ளவும் உபயோகிக்கவும் அவளுக்கு முழுமையான சுந்தரம் வழங்கப்படவேண்டும்.

* முடிவுகள் மேற்கொள்ளப்படும் எல்லா சந்தர்ப்பங்களிலும் பெண்களுக்கு சமமான பங்குபற்றல் வழங்கப்படவேண்டும். குடும்ப மட்டத்தில் சமூக மட்டத்தில் அதற்கான வாய்ப்பும் சுதந்திரமும் பெண்ணுக்கு வழங்கப்படவேண்டும்.

* இவ்வாறான நிலைகளின் போது பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பும் அரவணைப்பும், அங்கீகாரமும், அணுசரணையும் உறுதி செய்யப்படவேண்டும்.

பெண் வளவாக்கம் அல்லது பெண் மேம்பாடு என்பதனூடாக நாம் அடையாளப்படுத்தும் கருத்துகளாகும். இவை இஸ்லாத்திற்கும் அல்லாஹ்விற்கும் மாற்றமானவை அல்ல, இவை எம்மை சுவனத்திற்கு அழைத்துச் செல்வதை விட்டும் தடுக்கக்கூடயவையும் அல்ல.

அல்லாஹ்வின் தூதைச் சுமந்து இந்த உலகத்தை வளப்படுத்தி அமைதியும் சுபீட்சமும் நிலவும் பூமியாய் அன்பும் கருணையும் வாழும் இல்லங்களாக மாற்றிடும் வல்லமை எம் கரங்களிலேயே இருக்கிறது. ஆணா பெண்ணா என்ற கேள்வியை விட ஆளுமையும் மனிதநேயமும் மிக்க மனிதனா என்ற வினாவே முக்கியம் பெறுகிறது.

மாற்றங்களின் வித்து மனசுகளில் தான் முதலில் ஊன்றப்பட வேண்டும். வேரும் விழுதும் ஊன்றிய விருட்சம் சின்ன விதைக்குள் தான் சிறைப்பட்டிருக்கின்றது.

சிந்தனைகள் அகலப்படட்டும்; புதிய கதவுகள் திறக்கப்படட்டும் இன்ஷா அல்லாஹ்.


முற்றிற்று.

எனக்கென்றோர் உலகம் இருக்கிறது'

எமது குடும்பங்கள்


Shameela Yoosuf Ali

எனக்கென்றோர் உலகம் 8


நடத்தை ரீதியான மாற்றம் சிந்தனாரீதியான மாற்றத்தின் விளைவாகத் தான் ஏற்பட முடியும்.

தற்போதைய சமூக ஒழுங்கில் பெண்கள் ஆண்களின் ஒரு சுமையாகவே அடையாளப்படுத்தப்படுகின்றார்கள், பெண்கள் தமது திறன்களை வளர்த்துக் கொள்வதோ அல்லது அவற்றை வாழ்வியலுக்காக உபயோகிப்பதோ கிடையாது. இதன் காரணத்தால் எமது குடும்ப ஒழுங்குகள் மிகவும் போலியான கட்டுப்பாடுகளை வெளிப்படுத்துகின்ற மிகப்பலவீனமான ஆரோக்கியமற்ற சமூகநிறுவனங்களாக விளங்குகின்றன.

மிக முன்மாதிரியான இஸ்லாமிய குடும்ப உருவாக்கத்தைப் பற்றி அறிவு ஜீவி முஸ்லிம் சமூகமும் இயக்கங்களும் மிகுந்த முக்கியத்துவத்தோடு பேசுகின்றன.எனினும் எமது குடும்பங்களுக்குள் அமைதியழப்புக்களும்,விரக்தி கையாலாகாத மனப்பான்மைகளும் தாராளமாக நிரவியிருக்கின்றன. எனவே இந்த நிலையில் ஏற்படும் நடத்தை ரீதியான மாற்றம் நல்ல குடும்ப உருவாக்கத்திற்கு துணை நிற்கும்.நல்ல குடும்பமே ஆரோக்கியமான சமூகத்தின் அச்சாணி.

எனக்கென்றோர் உலகம் இருக்கிறது'

இந்த உலகம் ஆணுக்கானதா இல்லை பெண்ணுக்கானதா?


எனக்கென்றோர் உலகம் - 7

Shameela Yoosuf Ali

ஒரு பெண் அவள் அல்லாஹ்வின் படைப்பு, ஒரு ஆண் அவனும் அல்லாஹ்வின் படைப்பே, இருவரையும் மனிதர்கள் என்றுதான் அல்லாஹ் அடையாளப்படுத்துகின்றான்.

எனவே அல்லாஹ் இயற்கையாக ஏற்படுத்தியிருக்கும் ஆணுக்கான இயல்புகளுடன் ஒரு ஆண் சுதந்திரமாக வாழுகின்ற அதே உலகில் ஒரு பெண்ணுக்கு அல்லாஹ் இயற்கையாக ஏற்படுத்தியிருக்கும் இயல்புகளோடும், மிகத்தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கும் வரையறைகளுடனும் சுதந்திரமாக வாழ்கின்ற நிலை மறுக்கப்படுவதை நாம் பரவலாகக் காணுகின்றோம்.

இதனை நாம் பெண்கள் மேம்பாடு செயற்கையாக இறைநியதியை மீறி தடுக்கப்படுகின்றது என அடையாளப்படுத்தலாம்.

இங்கு பெண்ணின் இயல்பான சமூக வகிபாகம் இல்லாமலாக்கப்படுகின்றது;அவளது சுதந்திரமான சிந்தனைகளும் இருப்பும் தனித்துவமான இயல்பூக்கங்களும் நசுக்கப்படுகின்றன.

பெண்களுக்கு கல்வி ரீதியான மேம்பாடு அவசியப்படுகின்றது. இங்கே எவ்வித தடைகளும் இருக்க முடியாது.

பெண்களுக்கு சமூக, பொருளாதார, அரசியல் ரீதியான மேம்பாடு அவசியப்படுகின்றது.

இவை இஸ்லாத்தின் வரையறைகளுடனும் அல்லாஹ் இயற்கையாக ஏற்படுத்தியிருக்கும் இயல்புகளுடனும் இணைந்ததாக இருக்க வேண்டும், சமூகம் என்ற பெயரில் செயற்கையான திணிப்புகளால் கட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கக்கூடாது என்ற சிந்தனை தான் எதிர்பார்க்கப்படும் கருத்து ரீதியான மாற்றமாகும்.

எனக்கென்றோர் உலகம் இருக்கிறது'

பெண்ணின் சமூக வகிபாகம்


எனக்கென்றோர் உலகம் - 6


Shameela Yoosuf Ali

பெண்கள் சுயாதீனமும் தனித்துவமும் அங்கீகரிக்கபடுகின்ற சூழலில் சமூகமாற்றத்தை நோக்கிய புறப்பாடு மிக உறுதியாக நிகழும் இன்ஷா அல்லாஹ்.அப்படியான ஒரு சமூகம் தான் அல்லாஹ்வின் தூதரின் கனவு.ஆண்களும் பெண்களும் இணைந்து செல்லும் பயணத்தில் இருபாலருக்குமே அங்கீகாரமும் சுயநிர்ணய உரிமையும் இன்றியமையாதவை.

இந்த நீள் நெடும் பயணத்திற்கு முன் எங்கள் பார்வையில் ஒரு மாற்றம் அவசியம்.முதலில் பெண்கள் குறித்து கருத்து ரீதியான மாற்றம் நமக்குள் நிகழ வேண்டும்,அது காலவோட்டத்தில் பெண்கள் பற்றிய எமது நடத்தை ரீதியான மாற்றத்தினை நோக்கி எம்மை வழிநடாத்தும்.

"கருத்து ரீதியான் மாற்றம்" என்னுபோது தற்போது சமூகத்தில் பெண்ணின் வகிபாகம் குறித்து நாம் ஒளிவு மறைவின்றிப் பேசவேண்டும். மகள், மனைவி, தாய் என குடும்ப ரீதியான வகிபாகங்கள் நிறையவே பெண்ணுக்கு இருக்கின்றன. சமையல்காரி, ஆசிரியை, வைத்தியர், ஊடகவியளாலர், தாதி, போன்ற ஒரு சில தொழில் சார் வகிபாகங்கள் பெண்களுக்கு வழங்கப்படுகின்றன. ஆனால் பெண்களுக்கு சமூக ரீதியான வகிபாகம் என்ற ஒன்று இருக்கின்றதா எனக்கேட்டால் பதில் தெளிவானதாக இருக்கப்போவதில்லை; பெண்ணின் சமூகப் பாத்திரம் பற்றிப் பேச தயங்குகின்ற நிலை இருக்கின்றது.மார்க்க அடிப்படைகளின் பிழையான கருத்துப் பெயர்ப்புக்களும் வழி வழியாக வந்த தந்தை வழி சமூகத்தின் ஆதிக்க மனோபாவங்களும் இந்த சிந்தனைக்குழப்பத்தின் வேர்களாக இருக்கக்கூடும்.


எனக்கென்றோர் உலகம் இருக்கிறது'

பெண் வளவாக்கம்



எனக்கென்றோர் உலகம் - 5

Shameela Yoosuf Ali

"பெண்கள் உரிமை"என்ற எண்ணக்கரு அல்லது கருத்தியல் இலங்கை முஸ்லிம் சமூகத்தளத்தில் ஒரு தப்பான அல்லது ஒவ்வாத ஒரு விடயமாகவே அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. பெண்கள் சார்ந்து பேசப்படுகின்ற எல்லா விடயங்களும் இந்தக்குறிப்பிட்ட வட்டத்துக்குள் அடக்கப்படுவதனால் பெண்கள் குறித்த விடயங்களைப் பேசுவதற்கான தயக்கம் நிலவுகின்றது. மேலைத்தேய பெண்ணியம் சார்ந்த கருத்தியலோடு அல்லது பெண் விடுதலை, பெண்கள் உரிமை என்னும் விடயத்தோடு நாம் ஒருபோதும் உடன்பாடு காண்பதில்லை.இஸ்லாம் பெண்களை கண்ணுக்குத்தெரியாத கண்ணுக்குத் தெரிகின்ற அனைத்துச் சிறைகளிலிருந்தும் விலங்குகளிலிருந்தும் விடுதலை செய்கிறது.பெண் விடுதலை என்பதை மேலைத்தேய பெண்ணியத்தோடு சேர்த்தே நாம் பிழையாக விளங்கியிருக்கிறோம்,எனவே தான் இலங்கை முஸ்லிம் சமூகத்தில் "பெண் மேம்பாடு" அல்லது "பெண் வளவாக்கம்" போன்ற மாற்றுப்பதங்களை உபயோகிக்க நாம் நிர்ப்பந்திக்கப்படுகின்றோம்.


எனக்கென்றோர் உலகம் இருக்கிறது

நான் ஒரு பெண்

எனக்கென்றோர் உலகம் - 4

Shameela Yoosuf Ali

“நான் ஒரு பெண்; இறைவனின் அற்புதமான படைப்பு, இந்த உலகத்துக்கான எனது பங்களிப்பை வழங்க நான் தயாராக இருக்கிறேன்.அல்லாஹ்வின் முன் மாத்திரமே நான் சிரம் தாழ்த்துவேன்.மனித சமூகத்தின் ஒருவள் என்ற வகையிலும் இப்பரந்து விரிந்த பிரபஞ்சத்தின் ஓரங்கம் என்ற வகையிலும் எனக்கிருக்கும் சுதந்திரத்தையும் பொறுப்புக்களையும் நான் முழுமையாக அறிந்து வைத்திருக்கிறேன்; அவற்றைத் துஷ்பிரயோகம் செய்யாமல் மிகச்சரியாகப் பயன் படுத்த முயற்சி செய்வேன்.என்னை சகோதரியாக,மனைவியாக தாயாக பார்க்க முன் தனிப்பட்ட விருப்புவெறுப்பும் உடம்பும் சதையும் உணர்வுகளும் கொண்ட தனி மனுஷியாகப் பாருங்கள். எனக்கென்று தனியான சிந்தனைப் பாங்கு இருக்கிறது;எனக்கென்று சில எல்லைகள் இருக்கின்றன;எனக்கென்று ஓர் உலகம் இருக்கின்றது. இஸ்லாம் எனக்குத் தந்த உரிமைகளை மரபு,சம்பிரதாயம் என்ற பெயரில் தயவு செய்து மறுதலிக்காதீர்கள்” என தெளிவாக ஒரு பெண்ணால் கூற முடிந்தால் அதற்கேற்ற விதமான வாழ்க்கையும் சுற்றமும் அவளுக்கமைந்தால் அவளை விட அதிஷ்டசாலியான பெண் இருக்க முடியாது.

'எனக்கென்றோர் உலகம் இருக்கிறது'

சமீலா யூசுப் அலி.

அந்தப் பணி யாருக்குரியது?


எனக்கென்றோர் உலகம் - 3

Shameela Yoosuf Ali



அல்லாஹுத் தஆலா ஆணையும் பெண்ணையும் இந்த உலகில் கண்ணியமான பிரதிநிதிகளாக, உயிரும் உணர்வுகளும் கொண்ட மனிதர்களாக அனுப்பினான்.ஒவ்வொரு ஆணும் ஒவ்வொரு பெண்ணும் இந்த உலகத்திற்கு அனுப்பப்பட்டதற்கான நோக்கம் இருக்கிறது.உலகை வளப்படுத்தி அமைதியான சூழலொன்றினை உருவாக்கும் உயரிய பணிக்கான பங்களிப்பை வழங்குவதே அது.பூமியைச் செழிக்கச் செய்யும் அதியற்புதமான வாய்ப்பு உங்களுக்கு தரப்பட்டிருக்கும் போது,அந்தப்பணியை மிகச்செவ்வனே நிறைவேற்றக்கூடிய வல்லமையும் ஆற்றலும் வாய்க்கப்பட்டிருக்கும் பொழுது நீங்கள் எப்படி சாதாரணமாய் வாழ முடியும்.

'எனக்கென்றோர் உலகம் இருக்கிறது'

சமீலா யூசுப் அலி.

சுயம் இழத்தலுக்குரியதா?



எனக்கென்றோர் உலகம் - 2


Shameela Yoosuf Ali

வாழ்க்கையில் சுயத்தை தொலைப்பது பெண்களுக்கு மட்டுமா நடக்கிறது என்ற முணுமுணுப்புக்கள் என் காதில் விழாமலில்லை.வெளியுலகோடு அதிகம் தொடர்புடையவர்களாக நமது ஆண்கள் இருப்பதால் ஒப்பீட்டு ரீதியில் சுயத்தை இழப்பவர்களில் பெண்களே அதிகம்.இதிலும் ஒரு வேடிக்கை என்னவென்றால் பல மகளிர் தம் மனதில் தோன்றும் வெற்றிடத்தைக்கூட புரிந்து கொள்ள முடியாமல் வாழ்க்கை வண்டியை ஓட்டிச் செல்பவர்களாக இருக்கின்றனர்.காலப்போக்கின் இது விரக்தியாகவும் மன அழுத்தமாகவும் மாறி தம்மைச் சார்ந்தவர்கள் மீதான கடுமையான அதிருப்தி அல்லது தன்னைப் பற்றிய அதீத கழிவிரக்கம் போன்ற வடிவங்களில் வெளிப்படக்கூடும்.

அன்றாடம் நான் சந்திக்கும் பெண்களில் பலர் இந்த அடையாளம் இழத்தலுக்கு ஆளாகியிருப்பதைக் காணும் போது வருத்தமாயிருக்கிறது.


'எனக்கென்றோர் உலகம் இருக்கிறது'

சமீலா யூசுப் அலி.

நீ ஒரு பெண்ணிலைவாதி

எனக்கென்றோர் உலகம் - 1

Shameela Yoosuf Ali


ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்னரே இறைவன் தூதர் பெண்களுக்கு மறுக்கப்பட்டிருந்த உரிமைகளைத் தாராளமாய் வழங்கியதும் மனித சமூகத்தினோர் அங்கம் என்ற வகையில் அவர்களையும் அங்கீகரித்த வரலாறும் நாம் அறிந்தவை.

வெற்றிகரமான வியாபாரத் தலைவியாய் இருந்த சீமாட்டி கதீஜா (ரலி) அவர்களும் அறிவின் அன்னை ஆஇஷா(ரலி) அவர்களும் வெறும் ஏடுகளிலும் இறுவட்டுக்களிலும் மட்டுமே வாழ்ந்து விட்டுப் போகட்டும் என்ற அலட்சியம் சமயங்களில் இறுமாப்பாய்க் கூட ஆகிவிடுகிறது.

இப்போதெல்லாம் பெண்களைப் பற்றியும் அவர்களின் பிரச்சினைகளைப் பற்றியும் எழுத முன் ஒரு கணத்தை சிந்தனைக்குக் கொடுத்து விட வேண்டிய நிர்ப்பந்தம்.சிறுவர்களைப் பற்றி எழுதுபவர்களை யாரும் சிறுவர்நல வாதி என அடையாளப்படுத்துவதில்லை.

ஏழைகளைப் பற்றிப் பேசுபவர்களுக்கு விசேட பெயரெதுவுமில்லை; எனினும் பெண்களைப் பற்றிப் பேசினாலே பெண்ணிலைவாதி என்ற பெயர் வந்து விடுகிறது.

சமீபத்தில் ஒரு திரைப்படம் வெளிவந்தது. ஆங்கிலம் தெரியாத ஒரு குடும்பத்தலைவி அருமையான மனைவியாகவும் அன்பான தாயாகவும் இருக்கிறாள்.வீட்டிலேயே அருமையான லட்டு தயாரித்து விசேட வைபவங்களுக்குக் வழங்கி வரும் அந்தப் பெண்ணுக்கு ஆங்கிலம் தெரியாது:அவள் வெளியில் சென்று வேலை பார்க்கவில்லை. இப்படி இப்படியான காரணங்களினால் குடும்பத்திற்கும் அவளுக்குமிடையே கண்ணுக்குத் தெரியாத வேலியொன்று வளர்கிறது.வளர்ந்த மகள் தான் படிக்கும் ஆங்கில் மூலப் பாடசாலைக்கு தாய் வருவதை வெறுக்கிறாள்; என் மனைவி லட்டு செய்யவே பிறந்திருக்கிறாள் எனப் பேசி அவளின் மற்றைய ஆற்றல்களை புரிந்து கொள்ள மறுக்கிறான் கணவன். குடும்பத்தின் ஆயிரம் அலுவல்களைச் செய்து வரும் அந்தப் பெண் மனதில் விரக்திக்கும் வெறுப்புக்கும் இடைப்பட்ட ஒரு வெற்றிடம் தோன்றுகின்றது.சுயம் இழந்த அந்தப்பெண் ஆங்கிலம் படிப்பதும் பின் தான் லட்டு தயாரிக்கும் ஒரு தொழிலதிபர் என்பதைப் புரிந்து கொண்டு தன்னை நேசிக்கத் தொடங்குவதுமாய் கதை தொடர்கிறது.கதைகளும் திரைப்படங்களும் நிஜவாழ்வின் கண்ணாடிகள் எனினும் அவற்றின் முடிவுகள் நிஜ வாழ்வில் நடைபெறுவதில்லை என்பது சோகமயமான உண்மை.

'எனக்கென்றோர் உலகம் இருக்கிறது'
சமீலா யூசுப் அலி.

Saturday, May 23, 2015

சிறுவர் தினமும் புலமைப்பரிசில் பரீட்சையும்.


Shameela Yoosuf Ali


இன்றைய நாளின் தொடக்கம் மிக ரம்யமாகவே இருந்தது.ஒன்று இன்று காற்று நொண்டி நொண்டி வரும் மழை நாளாக இருந்தது;அடுத்தது இன்று உலக சிறுவர் தினம் என்பது. ஒக்டோபர் முதலாந்திகதி சிறுவர் தினம் என்பது நாம் மறந்தாலும் சமூக ஊடகங்கள் ஞாபகப்படுத்த மறக்கவில்லை.

சிறுவர்கள் தினம் என்று ஒரு நாளைக் கொண்டாடி விட்டு மீதி நாட்களில் அடியும் வசவுகளுமாக இந்தப் பிஞ்சு உள்ளங்களை நோகடிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.அதே நேரம் அந்த ஒரு தினத்திலாவது சிறுவர்களுக்கு கொஞ்சம் சிறகு முளைப்பதையும், பரிசுகள் கிடைப்பதையும், வளர்ந்த குழந்தைகளுக்கெல்லாம் மீண்டுமொரு முறை மனவெளியில் அந்தச் சிறுபராயத்துக்குள் சென்று வருவதற்கான வாய்ப்புக் கிடைப்பதையும் ஏன் மறுதலிக்க வேண்டும்?

சிறுவர் தினம் கொண்டாடுவதில் தனிப்பட்ட முறையில் எனக்குச் சம்மதம் தான்.இந்தத் தினத்தில் குழந்தைத்தொழிலாளர்கள்,சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் வறுமை போன்ற தலைப்புக்கள் ஊடகங்களில் கவனயீர்ப்பையும் பெறுகின்றன.

ஒரு விசேடம் இந்த ஆண்டு சிறுவர் தினம் இலங்கையில் பல சிறுவர்களின் உள்ளத்தில் கொடூர ஆணிகளையும் அடித்து விட்டு அமைதி கொள்கிறது.
ஆம், இன்று ஆண்டு 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியாகின.

கட்டற்ற காற்றாய் கடிவாளமற்ற குதிரைகளாய் ஓடித்திரியும் குழந்தைகளுக்கு கால்விலங்கு தான் இந்தப்பரீட்சை.

இரவு பகலாய் குழந்தையை விழிக்கச் செய்வதாகட்டும்;ஒரு ட்யூசனிலிருந்து இன்னொரு ட்யூசனுக்கு அழைத்துச் செல்வதாகட்டும் இந்தப் பரீட்சையில் முதலில் சோதனைக்கு உள்ளாக்கப்படுபவர்கள் பெற்றோர்கள்.

குழந்தையின் மதிய சிறுதூக்கம் கலைத்து ஹோம் வேர்க்.

மாலை நேரம் அக்கம் பக்கத்தில் சேரும் குட்டிக் குழு விளையாட்டுக்களிலிருந்து விலக்கு.

உறவினர் நண்பர்கள் வீடு விசேடம் சத்தியமாய் இல்லை.

குர்ஆன் மத்ரஸா பிறகு பார்த்துக் கொள்ளலாம்;இப்போதோ படிப்பே முக்கியம்.

எப்போதாவது கூட கார்டூன் பார்க்கக் கூடாது,
சித்திரம் வரைதலென்ற பெயரில் கிறுக்குதல் அநாவசியம்.

குழந்தைகளை விட தாய்மார்கள் இந்தப் பரீட்சைக்காக தங்களைப் பரீட்சைக்குட்படுத்திக் கொள்கிறார்கள்.

இவ்வளவும் செய்தும் சில பிள்ளைகள் சித்தியடைகிறார்கள்; பலர் பெயிலாகி விடுகிறார்கள்.
பாஸான குழந்தைகளை வைத்து ‘எப்படி படித்தார்கள்’ என்ற நேர்காணல் வேறு.சித்தியடைந்த குழந்தைகளை மனதார வாழ்த்துவதில் குறையேதுமில்லை.வாழ்த்துக்கள்.

குழந்தையின் நுண்ணறிவையோ,திறமைகளையோ ஏனைய திறன்களையோ முழுமையாக அறிந்து கொள்வதற்கு இந்தப் பரீட்சை எந்த வகையில் அளவீடாகாது.

கல்வி வாழ்க்கைக்கானது. வாழ்க்கையையே இழந்து கல்வி பெறுவது வேதனைக்கும் விசனத்திற்குமுரியது.
குழந்தைப்பருவம் வாழ்க்கையின் அதியற்புதமான வசந்த காலம்.காடுகளிலும் ஓடைக்கரைகளிலும் மீன்களோடும் பாடும் புள்ளினங்களோடும் குதூகலிக்க வேண்டிய உன்னதமான பருவம்.அந்தக் காலத்தை வேதனை மிகுந்த பரீட்சைச் சிறைக்குள் வானம் பார்க்காமல் கடத்துவதென்பது வருத்ததிற்குரியது.
சென்றால் திரும்ப வராததொன்று குழந்தைப்பருவம் என்பதை நினைவில் கொள்தல் அவசியம்.

தளர்ந்திருக்கும் குழந்தையை இனியாவது தட்டிக்கொடுங்கள்; உங்கள் ஊக்கமும் அன்பும் தான் அவர்கள் இந்த நிமிடம் அதிகம் வேண்டுவது.பாஸோ பெயிலோ அவர்களுக்கு நீங்கள் வாக்களித்த பரிசினை வாங்கிக் கொடுங்கள்.

இந்த தோல்வி தோல்வியல்ல என்பதை துவண்டிருக்கும் அந்தப் பிஞ்சு உள்ளங்களுக்கு உணர்த்துங்கள்.

குழந்தையின் மனமெனும் மெல்லிய கண்ணாடியில் ஒரு கீறல் கூட விழ அனுமதிக்க வேண்டாம்.
வாழ்த்துக்கள்!!!


Article by Shameela Yoosuf ALi
2013 Oct 1 st

நிறைவான மணவாழ்விற்கு… சில ஆலோசனைகள்




• உங்கள் துணைவியும் நீங்களும் ஆண்,பெண் என்ற இரு வேறு உலகை பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.ஆணும் பெண்ணும் ஒரே சொற்களைப்பாவித்தாலும் அர்த்தங்கள் வேறுபடும். மனைவி ‘நீங்கள் ஒன்றுமே செய்யவில்லை’ எனக்கூறும் போது அதன் அர்த்தம் கணவன் எப்போதுமே எதுவுமே செய்யவில்லை என்பதல்ல.

• நீங்கள் உங்கள் வேலைகளின் மத்தியிலும் அன்றாடம் ஒரு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்த மறக்க வேண்டாம்.துணைவி/துணைவரின் நாள் எப்படி என்று கேட்பதோடு உங்கள் அன்பை வெளிப்படுத்தும் குறுஞ்செய்திகள் அவர்களை மகிழ்ச்சிப்படுத்தும்.


• வாரமொரு முறை இருவரும் சேர்ந்து ஓரிடத்திற்குச் செல்வதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்அது ஒரு உறவினர் வீடாக இருக்கலாம்,சுற்றுலாத்தலமாக இருக்கலாம் அல்லது ஒரு புத்தகக்கண்காட்சியாக இருக்கலாம்.

• உங்கள் துணை எந்த மனோநிலையில் இருக்கிறார்,அவரது பிரச்சினை என்ன என்பதைப் புரிந்து கொண்டு அதற்கு கரங்கொடுத்து உதவி செய்யுங்கள்.

• செவிமடுங்கள், அதிகமான கணவர்கள் செவிமடுப்பதில்லை என்பதும் ,மனைவியர் அதிகமாகத் பேசுகின்றார்கள் என்பதும் வழக்கமான குற்றச்சாட்டாகும்.செவிமடுக்கும் போது என்ன சொல்கிறார்கள் என்பதை விட என்ன சொல்ல வருகிறார்கள் என்பதற்கு அதிக கவனம் கொடுங்கள்.


• குடும்பத்தின் வரவையும் செலவையும் இருவரும் சேர்ந்து திட்டமிடுங்கள்.அவரே செலவைப்பார்த்துக் கொள்ளட்டும் என்று மனைவியும்,அவளுக்கென்ன தெரியும் என்று கணவனும் உதாசீனமாக இருப்பது உறவில் விரிசலை ஏற்படுத்தும்.வரவும் செலவும் அதன் கோலங்களும் குடும்பங்களின் பிரச்சினைகளுக்கு ஆணிவேராக அமைகின்ற அம்சங்களாகும்.

• உங்கள் துணையின் இலட்சியம்,தொழில் மற்றும் சுயவளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பதோடு உங்களால் முடிந்தளவு உற்சாகத்தை வழங்குங்கள்.

• பரிசுகள் அன்பை வளர்க்கும்.இடைக்கிடை சில சின்னச் சின்ன பரிசுகளை வழங்குவதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

• பரஸ்பரம் மன்னித்துக் கொள்ளுங்கள்.தவறுகள் மனித வாழ்வில் தவிர்க்க முடியாதவை.மன்னிப்பது உங்கள் பெருந்தன்மையைக்காட்டுவதோடுமன்னிக்கப்பட்டவரிடம் உங்களை உயர்த்
திக்காட்டும்.

• பேசும் போது இனிமையான,அழகான சொற்களைப்பயன்படுத்துங்கள்.உங்கள் துணைவி அல்லது துணைவரை உண்மையான உள்ளத்தோடும் நேசியுங்கள்.

என் பிரார்த்தனைகளில் நீங்கள்


Shameela Yoosuf Ali 

என் நினைவுகளின் அடியாழத்தில் உங்களின் சுவடுகள் இன்னும் பத்திரமாய் இருக்கின்றன.என் தந்தை வழி பாட்டனார் நீங்கள்.யாரைப்பற்றியும் பொறாமைப் படத் தெரியாத எல்லோரைப் பற்றியும் நல்லெண்ணம் மட்டுமே சுமந்திருந்த ஓர் அற்புத ஆத்மாவாம் நீங்கள்- வாப்பா அடிக்கடி சொல்வார்.நெடுநெடுவென்ற உயரமும் சலவை செய்த வெண்ணிறமும் கொண்ட அமைதியின் உருவம்.உங்கள் கட்டிலில் உட்கார்ந்து ராக்கிஷி(ராட்சசி)களின் கதை கேட்ட ஞாபகங்கள் மங்கலாய் நினைவுக்கு வருகின்றன.என் மூன்று அல்லது நான்காம் வயதுகளில் நீங்கள் எப்போதைக்குமாய் எங்களிடம் விடை பெற்றுச் சென்றீர்கள்.மீண்டும் ஒரு நாள் உங்களை சுவனத்தின் அதிசிறந்த வீடொன்றில் சந்திக்கும் ஆவல்கள் இப்போதைக்கு ஆறுதல்கள் ஆகின்றன.'இறைவா,ஜன்னதுல் பிர்தவ்ஸ் எனும் உயர்ந்த சுவனத்தை என் அப்பாவுக்கு(பாட்டனார்) அருள்வாயாக.

ஆமீன்.

My Paternal Grand father Thaha Lebbe.
May Allah SWT Bless him Jannathul Firdouse.

வாப்பும்மா அமைதியாய் உறங்குங்கள்

சமீலா யூசுப் அலி

இருட்காட்டுக் கபுறுக்குள் அமைதியாய் உறங்கும்
வாப்பும்மா...

சிறுகதை போல பேசல் மீளக்கேட்கும் துயர்எனக்கில்லையினி.

மழை கொக்கரித்துப்பெய்யும் நடுவிரவுகளில்
அடரிருள் கபுறடியும் வாப்பும்மாவின் மையத்தும் நினைவுக்குள் வலிக்கும்.

வெள்ளிகளில் வாப்பா தவறாது சொல்வார்...

கபுறடியில் நீங்கள் பொல்லூன்றி நிற்பதைக் கண்டதாக.
அறுபதுகளிலும் வாப்பா அனுபவிக்கும் தாங்கொணாத் துயர்
எனக்கும் புரியும்.

வாப்பும்மாஉங்களுடற்சாறு அருந்திச் செழித்திருக்கும் மருதாணிச்செடிக்கு
சில வேளை தெரிந்திருக்கலாம்...

மரணம் ஒரு வாயிலென்பதும்
வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளியில்லையென்பதும்.

15.06.2011
@Shameela Yoosuf Ali

வாழ்தலை மறந்த கதை


அவளிடம் சொன்னேன்
அடுப்படி தாண்டு
.பருப்புக்கு வெங்காயம் தாளிப்பதை விட அனேக
விஷயங்கள் இருக்கின்றன
வா உன் சொந்தக்கால் கொண்டு பூமிப்பந்து சுற்றும்
வித்தை சொல்லித் தருகிறேன்

அவள் வந்தாள்.
சுமக்க முடியாத சங்கிலிகளையும்
முடிவற்ற சந்தேகங்களையும்
சுமந்து கொண்டு

மிகுந்த பிரயாசையோடு
அவள் சங்கிலிகளை ஒவ்வொன்றாய் களைந்தேன்
சந்தேகங்கள் முடிவுறாது ஒடும் நதியை ஒத்தனவாய்
நீண்டு நெடித்தலைந்தன.

இனி என்ன
களைப்போடு கேட்டாள்.
இனி நீ வாழத் துவங்கு

வாழ்தல் என்றால்
அயர்வோடு நோக்கினேன்.
அவள்
வாழ்தலை மறந்து வெகுநாட்களாகி விட்டிருந்தன.

2011.06.14
@Shameela Yoosuf Ali

கண்ணாடி மீன்கள்




Shameela Yoosuf Ali


நிலவொளி இரவுகளையோ
சமுத்திரத்தின் கர்ப்பத்திலுள்ள முத்துக்களையோ
பற்றிய அறிவு அதற்கில்லை.

அதுவோர் கண்ணாடி மீன்.
அதைச் சுற்றிய கைதட்டல்கள் பற்றி கர்வித்திருந்த்து.

எல்லையிலாப் பெரு வெளிகள் தாண்டி
வலிக்க நீந்திச் செல்லும் மீன்களைப் பற்றியும்
எதிர்பாராத மர்மங்கள் தரும் விடுதலை பற்றியும்
அதற்கெந்த கிளர்ச்சியும் இல்லை.

கண்ணாடித் தொட்டிக்கப்பால் அதிகபட்சம்
வரவேற்பறை உலகம்.

அண்டசராசரங்களையே சுற்றி வருவதாய்
ஒற்றையாயொரு சோழிக் கிழிஞ்சலை சுற்றி வந்து கொண்டிருந்தது.
.
ஒக்சிஜனையே செயற்கையாய் நுகர்ந்து கொண்டிருக்குமதற்கு அமாவாசை இரவுகளின் அலைப் பெருக்கென்ன தெரியும்?

அகன்றலையும் வானம் பார்த்து கடல் நுகரும் கனவுகள் கூட அதற்கு வந்ததேயில்லை.

அகழ் சமுத்திர மீன்கள் அலட்டாமல் நீந்திச் சென்று கொண்டிருந்தன,
முடிவறாத காலங்கள் தாண்டி....

கண்ணாடி மீனோ அகம்பாவத்துடன் சுதந்திரம் பற்றி பேசிக் கொண்டேயிருந்தது.

சமீலா யூசுப் அலி
19, April 19, 2015

The lonely cat

A water colour painting by me
Shameela Yoosuf Ali

2014 May 23
 

Cherry dreams


Painting by Shameela Yoosuf Ali
2014 November 6th
 

Friday, May 22, 2015

The green jar of Dreams A painting by Shameela Yoosuf Ali




Orange,apple and a pear

 Painting by Shameela Yoosuf Ali


The lonely Sparrow - A Painting by  Shameela Yoosuf Ali

Shameela Yoosuf Ali 

The meaning of Life



A Monochromatic painting of mine



பள்ளிவாயலில் ஒரு பெண்


Shameela Yoosuf Ali


வாழ்க்கையிலே இன்று ஒரு விசேசமான வித்தியாசமான நாள்.

இலங்கையிலிருந்து பலகாலமாக ஏங்கியும் கிடைக்காத ஒன்று இங்கிலாந்தில் வந்து பெற்றுக் கொண்டேன்.

ஜும்ஆத் தொழுகை

பெருநாள் தொழுகை, அதைத் தான் கூட்டாக பள்ளிவாயலின் பரந்து விரிந்த பரப்பொன்றில் தொழுதிருக்கின்றேன்.எல்லோரையும் கட்டியணைத்து வாழ்த்துக் கூறக் கூட இடமளிக்காமல் விரட்டும் கசப்பு அனுபவங்கள்.

‘அல்லாஹ்வே இதையெல்லாம் நீ பார்த்துக் கொண்டு தானே இருக்கிறாய்’ மனசுக்குள் கோபம் கிளர்ந்தெழும்;பேச முடியாது.

மஸ்ஜித் கொள்ளாமல் பெண்கள். தோளோடு தோள் சேர்ந்து தொழுகைக்காக நின்ற போது கண்ணில் நீர் முட்டுவதைத் தவிர்க்க முடியவில்லை. மார்க்கத்தின் பெயரால் எத்தனை ஆண்டுகள் இந்த இன்பத்தை சுகிக்க விடாமல் எங்களைத் தண்டித்திருக்கிறீர்கள்?

வீட்டின் ஒதுங்கிய மூலையில் தொழுவதை விட இந்த விசாலித்த பரப்பில் ஏனையவர்களோடு என் இறைவனிடம் பேசும் போது எத்துணை சுதந்திரமாக பாதுகாப்பாக இருக்கிறது என்பதை என் சர்வாங்கமும் உணர்கின்றது.

சுஜூதில்’ நிறைவாக என் உள்ளம் இந்த வாய்ப்பை தந்ததற்காக இறைவனைப் புகழ்ந்து கொண்டேயிருந்தது.

அஸ்ஸலாமு அலைக்கும் என்ற அன்பின் முகமன், அறியாதவர்களையெல்லாம் ஒரே விநாடியில் நேசர்களாக்கும் விசித்திரம்.நிறங்கள்,இனங்கள், மொழிகள் எல்லாவற்றினையும் தாண்டிய சகோதரத்துவ உறவின் வெளிப்பாடுகள்.ஒரு பள்ளிவாயலும் ஒரு ஜும்ஆவும் எனக்குக் கற்றுத் தந்த பாடங்கள்.

வெளியுலகத்திற்காக அணியும் வேஷங்கள் அத்துணையும் களைந்து வெறுமையாக நிற்கும் இடம் இதுவல்லவா?

குத்பாக்களால் தூங்கிய ஈமானிய உணர்வுகள் வாராந்தமேனும் தட்டியெழுப்பப் படும் அல்லவா?

இந்த நிம்மதி,இந்த அமைதி, இந்த கடலெனப் பொங்கும் உணர்வுகள் நம் பெண்களுக்கும் வேண்டாமா?

by சமீலா யூசுப் அலி
2015 Feburary 14

உம்மாவைப்பற்றி ஆயிரம் சொல்ல இருக்கின்றன



Shameela Yoosuf Ali

உம்மா அந்த ஒற்றை வார்த்தை போதும். 

ஆயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்தாலும் அந்த நேசத்தின் கதகதப்பை உள்ளம் உணர்கின்றது.

உம்மாவின் தேநீரின் சுவைக்கு உலகின் எந்த மூலையிலும் இன்னோர் இணை கண்டதில்லை.

பசிக்கவில்லை என்று படுத்துக் கொண்டாலும் பால் குவளையோடு வந்து நிற்கும் பரிவுக்கு நிகரேது?

உம்மாவின் கனவுகளை எங்களது கனவுகளுக்காக குர்பானி கொடுத்திருப்பதை ஒரு போதும் அவர் சொல்லிக் காட்டியதில்லை; ஆனால் புரிந்து கொள்கிறேன்.

உம்மாவின் அழகு போல் எவருமே இல்லை;ஆண்டுக்ளின் நீட்சியால் களவாட முடியாத பேரழகு.

நாமெல்லாம் படிக்க வேண்டும் என்பதில் அவர் காட்டிய தீவிரமும் வேட்கையும் இப்போது நினைத்தாலும் பிரமிக்க வைக்கிறது.

இன்று என் உம்மா ஒரு எழுத்தாளர் என்பது மறக்கடிக்கப்பட்டிருக்கலாம்;ஆனால் என் ஒவ்வொரு எழுத்தின் பின்னாலும் உம்மாவுக்குள்ளிருந்த ஒரு அக்கினிக் குஞ்சு கனன்று கொண்டிருக்கிறது.

உம்மாவின் மாணவிகள் அவர் மீது காட்டும் அதீத பாசம் நெகிழ வைக்குமளவு விசேசமானது. அவரது கிராஅத்தின் தேர்ந்த இனிமையையும் எழுத்தணிகளின் நேர்த்தியையும் உம்மாவிடம் கற்றவர்கள் பேசக் கேட்டிருக்கிறேன்.

உம்மா மீண்டும் எழுத ஆரம்பிக்க வேண்டும்; இது என் ஆசை.

உம்மாவைப்பற்றி ஆயிரம் சொல்ல இருக்கின்றன; அவற்றையெல்லாம் பகிரங்கமாக சொல்லிவிடமுடியாது.சில அந்தரங்கங்கள் அந்தரங்களாகவே இருந்துவிட்டுப் போகட்டும்.

பதிவை வாசிக்கும் போது உங்கள் உம்மாவின் ஞாபகம் கட்டாயம் உங்களுக்கு வந்திருக்கும்.

உம்மா தேக சுகத்துடனும் தெம்புடனும் திடத்துடனும் நீண்ட காலம் வாழ வேண்டும்; உங்கள் உம்மாவும் கூட.

பிரார்த்தனைகள்

சமீலா யூசுப் அலி
2015 May 10

முதுமையை எந்தவித ஒப்பனைகளும் இல்லாமல் சந்திக்க விரும்புகின்றேன்.



Shameela Yoosuf Ali

வயதாவதைப் பற்றிய பயத்தை மிகைத்து ஒரு விதமான கிளர்ச்சி எழுகிறது; ஏன் எனப் புரியவில்லை.

அடிக்கடி அறுபது வயதுகளுக்குள் மனசு ஓடிப் பிடித்து விளையாடுகிறது.

அருந்ததி ராய் எனக்கு மிகப்பிடித்த எழுத்துக்களுக்குச் சொந்தக்காரி.
நரைத்த சிகையின் கம்பீரத்தையும் மிடுக்கையும் அவரிடம் முதலில் பார்க்கிறேன்.

முதுமையில் அழகாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன்;ஆனால் சுருக்கங்கள் இல்லாத மேனியும் கருகரு சுருள் கூந்தலும் எப்பவும் இருக்க வேண்டும் என்ற பேராசை எல்லாம் கிடையாது.

இன்னோரு காலத்துக்குள் இருந்து கொண்டே நான் வாழ்ந்த காலம் பற்றிய பதிவுகள் எழுதுவதன் இன்பம் சுகிக்கவும்…

வாழ்வின் எல்லைகள்,ஏமாற்றம்,தோல்விகள் இவற்றின் வலிகளை மிகைத்த சாதனைகளை காலைத் தேநீரோடு அசைபோடவும்…

மனத்தை இறக்கை கட்டிப் பறக்க விட்டு கடற்கரைக் கருக்கலில் ஏகாந்தமாயொரு கரும் புள்ளியாய் கரைந்து போகுமந்த நிமிடங்களுக்காகவும்…

என் எழுத்துக்களாலோ வார்த்தைகளாலோ வாழ்வின் உயரங்கள் தாண்டிய மனிதனோ மனுசியோ பெருவெளியில் விசிறியிருக்கும் பிரார்த்தனைகளுக்காகவும்…

முதுமையை எந்தவித ஒப்பனைகளும் இல்லாமல் சந்திக்க விரும்புகின்றேன்.

February 15 2015
சமீலா யூசுப் அலி

வித்யா எங்களை மன்னித்து விடு.


கனவுகளின் ஒடங்களில் நாங்கள் நீந்திச் சென்றதோர் பொழுதொன்றில்
நீ கடத்தப்பட்டாய்.
நாங்கள் மாலைத் தேநீரை ருசித்து அருந்திக் கொண்டிருந்தோம்.
உன் கைகள் பின்புறம் கட்டப்பட்டன.
நாங்கள் கடைவீதிக் கண்ணாடிகளால் குதியுயரக் காலணிகளை ரசித்துக் கொண்டிருந்தோம்.
நீ சிதைக்கப்பட்டாய்.
நாங்கள் வீடு திரும்பிக் குழந்தைகளைக் கொஞ்சினோம்.
மீண்டும் சிதைக்கப்பட்டாய்.
நண்பிகளுடன் தொலைபேசியில் நீண்டதாய் ஒர் அரட்டை.
இன்னுமொருமுறை சிதைக்கப்பட்டாய்.
நாங்கள் குளியலறைக்குள் நுழைந்தோம்.
நீ கொடூரமாய்க் கொலை செய்யப்பட்டாய்.
அந்த எட்டுக் கோழைகளையும் மிருகங்கள் என்று கூற விரும்பவில்லை.
மிருகங்கள் அன்பும் உள்ளார்ந்த உணர்வுகளும் பொருந்தியவை.
அரக்கர்கள் என்றும் கூறக் கூடாது;அம்புலி மாமாக் கதைகளில் இரக்கம் பொருந்திய அரக்கர்களையும் வாசித்திருக்கிறேன்.
பதினெட்டு வருடங்கள் அனுபவிக்காத் துயர் அனைத்தும் அந்தக் கணம் உன் உடலும் உள்ளமும் அனுபவித்திருக்கும்.
நீ உன்னைக் காப்பாற்ற முடியாது போன உலகத்தை சபித்திருப்பாய்.
நீ கடைசியாக என்ன சொல்ல விரும்பினாய் என்பதைக் கேட்கும் திராணி எங்களுக்கில்லை.
இந்தக் கொலைக் கொடூர மனசுகள் எப்படி ஒரு தாய்க்குப் பிறந்து அவள் பாலருந்திய மனிதர்களுக்குள் வாய்க்கின்றன; புரிவதே இல்லை.
பெண்ணை சக ஆத்மாவாகவல்லாமல் சதையாக பார்க்கப் பழக்கப்பட்டிருக்கும் மனிதர்கள் நிரம்பிய உலகொன்றில் மூன்று வயதுப் பிஞ்சுக்கும் எழுவதைத் தாண்டிய மூதாட்டிக்கும் கூட இருத்தல் பேரச்சத்துக்குரியதே.
வித்யா எங்களை மன்னித்து விடு.
சமீலா யூசுப் அலி
மே மாதம் 13 ஆந்திகதி
யாழ் புங்குடுதீவு மகாவித்தியாலத்தின் உயர்தரவகுப்பு மாணவி வித்தியா சிவலோகநாதன் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டார்)