Thursday, July 10, 2014

சின்ன உழைப்பாளிகள்- என் நோன்பு கால டயறி


Shameela Yoosuf Ali

தலையில் சுமக்க முடியாமல் கார்ட் போர்ட் பெட்டிகளைத் தூக்கிக் கொண்டு நோன்புகால பின் அஸர் பொழுதுகளிலே அந்தச் சிறுவர்களிருவரும் வருவார்கள்.

படீஸ் ரோல்ஸ் இந்த இரண்டும் பெட்டிகளுக்குள் கவனமாக அடுக்கப் பட்டிருக்கும்.பத்து ரூபாய் படீஸும் பதினைந்து ரூபாய் ரோல்ஸும் சுட சுட கொண்டு வரும் அந்த மெலிந்த ஆகிருதிகளைப் பார்க்கும் போது மிகுந்த வேதனையாயிருக்கும்.குழந்தைப் பருவத்தை சில பிஞ்சுகள் மிக அவசரமாகத் துறக்க நேரிடுகிறது.

இருவருமே பாடசாலையில் படிக்கிறார்கள்,
நோன்புகாலங்களில் வீட்டில் செய்து தரும் உண்டிகளை விற்றுக் கொடுக்கிறார்கள்.வெள்ளையும்சொள்ளையுமாய் இவர்கள் வயதொத்த சிறுவர்கள் பள்ளிவாசல்களிலும் பாதை விளையாட் டுக்களிலும் ஈடுபட்டிருக்க கருமமே கண்ணாய் தெருவோரம் தலைச் சுமை கனக்க சென்று கொண்டிருப்பார்கள்.

நோன்பு அல்லாத காலங்களில் மாலை வேளைகளில் சோப்புடப்பா,சீப்பு,பிளாஸ்டிக் பாத்திரவகைகள் கொண்டு வருவார்கள்.தேவைகள் இல்லாத போதும் சமயங்களில் வாங்கி அந்த உழைப்பை பாராட்டத் தோன்றும்.

நாவூற வைக்கும் சுவை இல்லாத போதும் அந்தப் படீஸையும் ரோல்ஸையும் வாங்குவதும் அதே உழைப்புக்கு அங்கீகாரம் தர வேண்டும் என்பதற்காகத் தான்;அதற்கு மேலால் அனுதாபங் கலந்த அன்பும் இல்லாமலில்லை.

இப்போது அந்தச் சிறுவர்கள் கொஞ்சம் வளர்ந்து விட்டார்கள்.

கடைக்குப் போகவே தன்மானம் பார்க்கும் அவர்கள் வயதொத்த இளவயதினருக்கிடையே இவர்களிருவரும் வித்தியாசமாகத் தெரிவார்கள்.

இளமையில் வறுமை என்பது கொடுமையான விஷயம் தான்.

எனினும் நிரம்பவே யோசிக்கும் போது இந்தச் சிறுவர்களின் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்ற எண்ணந்தோன்றுகின்றது.

நிறையச் சாதித்தவர்கள் சிறுவயதில் கடின உழைப்பும் கஷ்டங்களிலும் வளர்ந்தவர்கள்.துன்பங்கள் இவர்களைச் செதுக்குகின்றன.

அவமானம்,வலி இவைகளையெல்லாம் எதிர்கொள்ளும் துணிவு இவர்களிடம் வளர்கிறது.இவர்கள் சாதிக்கட்டும் என்று நெஞ்சாறப் பிரார்த்திக்கிறேன்.

இப்போதைக்கு நம் கடமை நம் அயலில் இவ்வாறான சிறு செடிகள் விருட்சமாய் வளரத் துடித்துக் கொண்டிருக்கலாம்;துளி தண்ணீர் விடுங்கள்.

சமூகம் என்ற வகையில் இப்படியான சின்ன உழைப்பாளிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான கடப்பாடு நம் மீது நிறையவே இருக்கிறது.

அந்த யூத சகோதரனும் நாமும் -என் நோன்பு கால டயறி


பலஸ்தீனம்…நபிமார்களின் கால் பதிந்த பூமித்துண்டு.

உலக வரலாற்றில் தொடர்ந்தேர்ச்சியாக அநியாயத்துக்குள்ளாக்கப்பட்ட ஒரே நாடு.

ஒரு காலத்தில் பழங்களும் பூக்களுமாய் ஒரு சொர்க்கத்தின் மிச்சமாய் இருந்த நிலம்.

முஸ்லிம்களின் முதல் கிப்லா பைதுல் முகத்திஸ்ஸினைத் தாங்கி நிற்கும் பேறு பெற்ற பெரும் பூமி.

தளிராய் துளிர்க்க முன்னரே குர்ஆன் சுமக்கும் பிஞ்சுக்கள்.
உழைத்து உழைத்து சிவந்து கன்றிப்போன அன்னையர் கரங்கள்.

துப்பாக்கிச் சப்தங்களோடு பள்ளிக்கூடத்தின் இடிந்த சிதிலங்களில் கற்கும் மாணவர்கள்.

நெஞ்சுரமும் அமைதியும் கொண்ட மனிதர்கள்.

தம் தாய் பூமியிலே அகதிகளாக்கப்பட்டு,சொல்லொணாத் துன்பங்களுக்கும் துயரங்களுக்குமுள்ளாகி,
விரட்டப்பட்டு,கைதிகளாக்கப்பட்டு இன்று வரை நீதி கிடைக்காத பலஸ்தீனர்கள் இறுதி வரை தம் போராட்டத்தைத் தொடரும் திடம் வியக்க வைக்கிறது.

அல்லாஹ்வை உள்ளத்தில் சுமந்தவர்கள்;துப்பாக்கிக் குழலுக்கு மேலால் தைரியமாய் நெஞ்சுயர்த்தி நடப்பவர்கள்.

கால்பந்தாட்டம் பார்த்து நாமெல்லாம் களித்துக் கொண்டிருந்த போது காஸாவில் உயிரோடு சிறுவர்கள் எரிந்து கொண்டிருந்தார்கள்.

கால்பந்தாட்டம் தேவை தான்; அதே நேரம் பலஸ்தீன் எனும் துயரம் எங்கள் இதயம் பிராண்டவில்லையெனில் நாங்கள் உயிருள்ள சடங்கள் மட்டுமே.

பலஸ்தீனப் போராட்டம் நீதியின் போராட்டம்.
நசுங்கிய தன்மானத்தை மீட்டெடுக்கும் போராட்டம்.

இஸ்ரேலில் இருந்து கொண்டே பலஸ்தீனப்போராட்டத்துக்கு ஆதரவளிக்கும் ஒரு யூத சகோதரனை நீண்ட காலமாய் நான் அறிவேன்.இஸ்ரேலின் அழிவை இஸ்ரேலுக்குள்ளிருந்தே எழுத ஒரு குழு நிச்சயமாய்க் கிளம்பி வரும்.

பலஸ்தீனப் போராட்டத்தை அங்கீகரிக்கும்
முஸ்லிம் உம்மத்தின் ஓரங்கம் என்ற வகையில் எங்களது பொறுப்பு இன்னும் பாரமாயிருக்கிறது என்பதை அந்தச் சகோதரனின் பங்களிப்பு எனக்கு அடிக்கடி ஞாபகப்படுத்துகிறது.

நீளும் நோன்பிலும்,இப்தார் வேளைகளிலும்
ஒவ்வொரு தொழுகையிலும் பலஸ்தீனத்து சொந்தங்களை கொஞ்சமாவது எண்ணிப்பாருங்கள். உயிரோட்டமான துஆக்கள் உயிரின் ஆழத்திலிருந்து வரட்டும்.

உங்கள் உதவிக்கரங்களை நீட்டுங்கள்;பலஸ்தீனத்துக்கு நீங்கள் தேவைப்படுகிறீர்கள்;இப்போதே,மிக அவசரமாகத் தேவைப்படுகிறீர்கள்.

நீங்கள் தயாரா?

By Shameela Yoosuf Ali

2014.July 9th
#ரமழான் #பலஸ்தீனம் 

உளம் தொடும் ஒரு கதை!


Shameela Yoosuf Ali


இஷாவின் அதானுக்கு 15 நிமிடங்களே மிஞ்சியிருந்தன.
நான் அவசர அவசரமாக வுழூ செய்து மஹ்ரிப் தொழுதேன்.
தொழுது முடிந்த பின் எனக்கு ஏனோ உம்மும்மாவின் ஞாபகம் வந்தது.என் தொழுகையை எண்ணி வெட்கமாக இருந்தது.
உம்மும்மா தொழும் போது நீண்ட நேரமெடுத்து அமைதியாகத்தொழுவார்.சுஜூதில் தலை வைத்தேன் அப்படியே கொஞ்ச நேரம் இருந்தேன்.

நாள் முழுதும் வேலை,மிக மிக களைப்பாக இருந்தேன்.
திடீரென இடி முழக்கம் போலொரு சப்தம்.திடுக்கிட்டெழுந்தேன்.
இது என்ன? வியர்த்து வியர்த்துக் கொட்டுகிறது.
எல்லாப்பக்கம் சன சமுத்திரம்.
நான் எங்கே நிற்கிறேன்.சிலர் ஓரிடத்தில் விறைத்து நிற்கிறார்கள்.சிலர் அங்கும் இங்கும் ஓடித்திரிகிறார்கள்.

சிலர் முழங்காலில் முகம் புதைத்து அழுது கொண்டிருக்கிறார்கள்.
பயம் என்னைப் பிய்த்துத் தின்னத்துவங்கியது.நான் எங்கிருக்கிறேன் என்பதை சர்வ நிச்சயமாய் உணர்ந்து கொள்கிறேன்.இதயம் நெஞ்சாங்கூட்டிலிருந்து எகிறி வெளியேறத்துடிக்கிறது.
இது இறுதித்தீர்ப்பு நாள்.

நான் உலகத்தில் இருந்த போது இந்த நாளைப்பற்றி எவ்வளவெல்லாம் கேட்டிருப்பேன்,வாசித்திருப்பேன்.ஆனால் இவ்வளவு சீக்கிரமாக இந்த நாள் வரும் என்று நினைக்கவில்லையே!!!
ஒரு வேளை இதெல்லாம் வெறும் பிரமையோ?

இல்லை,இல்லை இதெல்லாம் நிஜமாகவே இருக்கிறது.இந்தப் பயம்…..இதுவரை நான் வாழ்நாளில் உணர்ந்ததில்லை.
எனது பெயரைக் கூப்பிட்டு விட்டார்களா என்று ஒருவர் இருவரிடம் பதட்டத்தோடு கேட்டபடி கூட்டத்தோடு நானும் நகர்கிறேன்.
திடீரென என் பெயர் அழைக்கப்படுகிறது.

ஆமாம்,என் பெயரே தான்.என் தந்தையின் பெயர் கூட சரியாக இருக்கிதே.
இந்த சனசமுத்திரம் அப்படியே பிளந்து எனக்கு வழிவிடுகிறது.
இரண்டு மலக்குகள் என் தோளிரண்டையும் பற்றுகிறார்கள்.சந்தேகம் நீங்காத கண்களோடு நடக்கிறேன்.

மலக்குகள் என்னை நடுவில் அமர்த்தி விட்டு நகர்கிறார்கள்.என் முழு வாழ்க்கையும் என் கண் முன்னே ஓடுகிறது ஒரு திரைப்படம் போல்.தலையைக்குனித்துக்கொள்கிறேன்.

திடீரென என் கண் முன்னே இன்னொரு உலகம் காட்டப்படுகிறது.அங்கு மனிதர்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்கிறார்கள்.

எனது தந்தை ஒரு சமூக சேவையிலிருந்துஇன்னொன்றுக்கு ஓடிக்கொண்டிருக்கிறார்.அவரது செல்வம் அல்லாஹ்வுடைய பாதையில் செலவளிக்கப்படுகிறது.

எனது உம்மா வீட்டிற்கு வரும் ஏழைகளுக்கு அள்ளி வழங்குகிறார்.விருந்தாளிகளுக்கு உணவளிக்கிறார்.
நான் கெஞ்சுகிறேன்.

நானும் அல்லாஹ்வுடையபாதையில் தான் இருந்தேன்.
மற்றவர்களுக்கு உதவினேன்.
அல்லாஹ்வுடைய தீனை மற்றவர்களுக்கு எத்தி வைத்தேன்.
எனது தொழுகைகளை நிறைவேற்றினேன்
ரமழானில் நோன்பு நோற்றேன்.
அல்லாஹ் சொன்னவற்றைச் செய்தேன்.
வேண்டாம் என்று சொன்னவற்றிலிருந்து தவிர்ந்து கொண்டேன்.
நான் எவ்வளவு அல்லாஹ்வை நேசித்தேன் என்பதை நினைத்து நான் விம்மி விம்மி அழத்துவங்கினேன்.

நான் உலகில் எதைத் தான் செய்திருந்தாலும் அது மிகக்குறைவே என்பதை அந்த நிமிடம் உணர்ந்தேன்.அல்லாஹ்வைத்தவிர வேறு யாராலும் என்னைக் காப்பாற்ற முடியாது என்று உறுதியாக அறிந்து கொண்டேன்.வியர்வை முன்னெப்போதும் இல்லாதளவு பெருகி வழிய நான் நடுநடுங்கினேன்.
கடைசித்தீர்ப்பை எதிர்நோக்கிய என் கண்கள் மீஸான் தராசில் நிலைகுத்தி நின்றன.

இதோ தீர்ப்பு.
நரகிற்கு செல்வோரின் பெயர்கள் வாசிக்கப்படுகின்றன.
இறைவா…….
என் பெயரும் வாசிக்கப்படுகிறது.
நான் முழங்காலில் விழுந்தேன்‘என்னால் முடியாது.இங்கே ஏதோ தவறு நடந்திருக்கிறது.நான் எப்படி நரகம் போக முடியும்” என்று கத்திக்கூச்சலிட்டேன்.தலை சுற்றியது.கண்களில் ஒளி மங்கியது.

மலக்குகள் இருவர் என்னை கொழுந்து விட்டெரியும் நரகிற்கு அழைத்துச் செல்கிறார்கள்.

என் கால்கள் கரடுமுரடான தரையில் இழுத்துச்செல்லப்படுகின்றன.
நான் சப்தமாக அழைக்கிறேன்.

“உதவுங்களே யாராவது”

எனது நற்செயல்களை அழைக்கிறேன்.ஓதிய குர் ஆனை,தொழுகைகளை அழைக்கிறேன்.

ரசூல் (ஸல்) அவர்களின் மணிமொழி ஞாபகத்துக்கு வருகிறது.ஐந்து முறை ஆற்றில் குளித்தால் உடம்பு சுத்தமடைவதைப்போல ஐவேளைத்தொழுகை பாவங்களை அழித்து விடுகிறது.
அழத்தொடங்கினேன்.
எங்கே என் தொழுகை?

எங்கே என் தொழுகை?
எங்கே என் தொழுகை?
மலக்குகள் நிற்கவில்லை;என் கதறலைக்காதில் போட்டுக்கொள்ளவுமில்லை.

நரகத்தின் சுவாலைகளின் வெப்பம் என் முகத்தை எரிக்கிறது.ஒரு முறை நம்பிக்கையின்றித் திரும்பிப்பார்க்கிறேன்.ஒரு மலக்கு என்னைப்பிடுத்து நெருப்புக் குண்டத்தில் தள்ளி விடுகிறார்.ஆவென்று கத்திக்கொண்டே நான் கீழே விழுகிறேன்.ஐந்தாறு அடிகள் விழுந்த பின் ஒரு கரம் என்னைப்பற்றி இழுக்கிறது.

தலையை உயர்த்திப்பார்க்கிறேன்.வெள்ளைத் தாடியுடன் ஒரு முதியவர்.

“நீங்கள் யார்?’

“நான் தான் உனது தொழுகை”

“ஏன் நீங்கள் இவ்வளவு தாமதித்து வந்தீர்கள்..இன்னும் கொஞ்ச நேரத்தில் நரகம் என்னை விழுங்கியிருக்குமே” ஆதங்கத்தோடு சொன்னேன்.
முதியவர் சிரித்தார்.”நீ எப்போதும் கடைசி நேரத்தில் தான் நிறைவேற்றினாய்,மறந்து விட்டாயா?

ஒரு நொடி…
நான் விழித்துக்கொண்டேன்,சஜ்தாவிலிருந்து தலையை உயர்த்தினேன்.
என் தாயும் தந்தையும் உரையாடுவது கேட்கிறது.
என் உடை வியர்வையில் குளித்திருக்கிறது.
அல்லாஹு அக்பர்!

அல்லாஹு அக்பர்!
இஷாவிற்கான அதான்.
உடனே எழுந்து வுழூ செய்வதற்காகச் சென்றேன்.

—-ஆங்கிலக்கதையின் தழுவல்- தமிழில் சமீலா யூசுப் அலி

Saturday, July 5, 2014

சிறுவர்களின் ரமழான் 1


Shameela Yoosuf Ali

காய்ந்து போன கட்டாந்தரை மனங்களெல்லாம் இளகி பச்சையும் மஞ்சளுமாய் பூத்திக்குலுங்கும்கரிசல் நிலங்களாக, வஹிக்குளிர் சுமந்து வருகிறது ரமழான்.

ஒரு முஸ்லிமின் பாதையில் ரமழான் குறுக்கிடும் கணங்கள் அபூர்வமானவை.ஆயிரம் மாதங்களை விட அதிகமான நாட்களை உள்ளிருத்தி வரும் ரமழான் எங்களிடம் தங்கப்போவதென்னவோ ஆங்கிலக் கலண்டரின் படி ஒரே மாதம் தான்.

இலங்கையைப் பொறுத்தளவில் ரமழான் மாதம் பாடசாலை விடுமுறை காலம்.ரமழானில் சிறுவர்களை எப்படி சமாளிப்பது என்ற கேள்வி பல அன்னையரை இப்போதே குடைந்தெடுக்கத் தொடங்கியிருக்கும்.பிஞ்சு உள்ளங்களில் அல்லாஹ்வை எழுதவும் தேவதைக்கதைகளிலிருந்து சிந்தனைகளை மேலே உயர்த்தவும் ஆக்கத் திறனை நெறிப்படுத்தவும் அருமையான சந்தர்ப்பம் இது.சிறுவர்கள் எனும் போது 2 வயதிலிருந்து 14 வரையிலான பல்வேறு கட்டங்களிலுள்ள அனைவரையும் குறிக்கும்.கீழே குறிப்பிடப்படும் செயற்பாடுகளை அவரவர் வயதிற்கேற்றவாறு இலகுபடுத்தவோ அல்லது கொஞ்சம் தரப்படுத்தவோ இயலும்.

ரமழானுக்கொரு வரவேற்பு

ரமழானை வரவேற்க வீடுகளை ஆயத்தப்படுத்தும் வழமை எமது கடந்த தலைமுறையினரின் எழுதப்படாத சட்டம்.முஸ்லிம்களின் வாழ்க்கையில் ரமழான் மிக முக்கியமானதொரு காலம் என்பதை சிறுவர்களுக்குப் புரிய வைக்கவும் நிறைந்த மனதோடு ரமழானை வரவேற்கவும் சில செயற்பாடுகளை நாம் ஒழுங்கு செய்யலாம்.

அறைகளை ஒழுங்குபடுத்தி தேவையற்ற பொருட்களை அகற்றி தூசு தட்டி வீட்டைக் கழுவும் போது சிறுவர்களை அவர்களுக்குடைய வயதுக்கேற்ற அமைப்பில் சேர்த்துக் கொள்ளுங்கள்.வீட்டின் முன்னால் ‘ரமழானே உன்னை வரவேற்கிறோம்’ என்ற வாசகம் (ஆங்கிலம் அல்லது அறபு மொழிகளைலும் இது அமையலாம்) தாங்கிய ஒரு சின்ன ‘பேனர்’ஐ சிறுவர்களுக்கு செய்யச் சொல்லுங்கள்.

இது ஒவ்வொருவரின் கற்பனைத் திறனுக்குமேற்ப துணியில் அல்லது வெள்ளை நிற அல்லது வேறு நிறத்தாள்களில் அமையலாம்.ஷஃபான் மாத இறுதிப்பகுதியிலிருந்து இந்த பேனரை உங்கள் வீட்டு வாசல்களில் தொங்க விடலாம்.இது சிறுவர்களை மட்டுமல்லாது பெரியவர்களையும் ரமழானை எதிர்பார்த்திருக்கும் உற்சாகத்தை ஏற்படுத்த துணையாகும்.

தொடரும்...

2011

Friday, July 4, 2014

ஏழையும் எளிமையும் – என் நோன்பு கால டயறி


Shameela Yoosuf Ali

ரமழான் தூங்கிய இதயங்களை தட்டியெழுப்பி இயங்கச் செய்ய வந்ததோர் இனிய கரம்.

ரமழானின் நன்மைகளின் உள்ளீடு.

ஒட்டிய வயிறுகளின் சோகம் அறிய இறையவன் தந்ததோர் அனுபவப் பயிற்சி.

இறைச்சிக் கஞ்சி,அகம் குளிர பாலுதா,எண்ணெய்யில் பொரித்தெடுத்த இரண்டு மூன்று வகை சிற்றுண்டிகள்,பேருக்கு ஈத்தம் பழம்,வகை வகையான பழசாலட்கள் இன்னோரன்னவை.

இரவுச் சாப்பாடு அவித்தெடுத்த இடியப்பம்,கிழங்குச் சொதி இறைச்சி ஆணம் கமகமக்க சின்ன மிளகாய் அரைத்த சம்பலுடன் உள்ளிறங்கும்.சூடாயொரு கோப்பி வேறு.

சஹர் நேரமோ தாளித்த சோறு,சீரகம் மணக்கும் கோழிக்கறி,வதக்கிய மரக்கறி,மணக்கும் பருப்பு,பொரித்த இறைச்சி இன்னும் இன்னும் பட்டியல் நீளும்.தயிரில்லாமால் சஹர் உணவு செரிக்குமா.வெண்ணெய்யாய் உருகும் தயிருக்கு மேல் கித்துள் பாணி விட்டு வாழைப்பழமும் வெட்டிப்போட்டு உண்ணும் கலை.ஏப்பம் விட்டுக் கொண்டே இன்னுமொரு ஏலக்காய் டீ.

ஏழைகளில் பசியறியும் மாதம் என்று யார் சொன்னார்கள்?
விதவிதமாய் புசிப்பதற்கல்லவா பழகி வைத்திருக்கிறோம்.

மாத இறுதியில் செலவும் இடிக்கும்;மற்ற மாதங்களை விட செலவு இருமடங்கு; குடும்பத்தலைவர் தலையில் அடித்துக் கொள்ளாத குறை.

நோன்பு வைத்து இரண்டு சுற்றுப் பெருத்துப் போன உடல்களை கண்ணாடியில் பார்த்து ஏங்கிக் கொள்ள வேண்டியது தான்.

அடர்த்தியான் சாப்பாடு அதிக தூக்கத்தைக் கொண்டு வரும்.உடல் களைத்துப் போக அல்லாஹ்வுக்காய் நின்று வணங்கலும் நீளமாய் ஓதலும் சோர்வைக் கொண்டு வரும்.

உற்சாகமாய் செய்திருக்க வேண்டிய பணிகள் எல்லாம் மந்தகதியுடன் நகரும்.

மாற்றம் எங்கள் வீட்டிலிருந்து தான் ஆரம்பமாக வேண்டும்.

எளிமையான இப்தார்.

பசி போக்கும் அளவு மட்டுமேயான இரவுணவு;பசிக்காதவர்கள் இரவுணவை தள்ளி வைக்கலாம்.

எண்ணெய்யும் வெண்ணெயும் மிதக்காத அளவான ஸஹர் உணவு.

நிறையத் தண்ணீர்;கொஞ்சம் பழங்கள்.

பெருக்கெடுத்தோடும் உற்சாகம்,உடல் களைக்காத வலிமை,உள்ளத்தின் சுறுசுறுப்பு.

ஏழையில் வலியை கொஞ்சமாவது உ
ணர வைக்கும் உண்மை ரமழான்.

இப்படியொரு நோன்பு வைப்போமா???

சமீலா யூசுப் அலி
July 5, 2014
‪#‎Shameelayoosufali‬ ‪#‎ramadan‬ ‪#‎health‬ ‪#‎ifthar‬