Sunday, May 24, 2015

நீ ஒரு பெண்ணிலைவாதி

எனக்கென்றோர் உலகம் - 1

Shameela Yoosuf Ali


ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்னரே இறைவன் தூதர் பெண்களுக்கு மறுக்கப்பட்டிருந்த உரிமைகளைத் தாராளமாய் வழங்கியதும் மனித சமூகத்தினோர் அங்கம் என்ற வகையில் அவர்களையும் அங்கீகரித்த வரலாறும் நாம் அறிந்தவை.

வெற்றிகரமான வியாபாரத் தலைவியாய் இருந்த சீமாட்டி கதீஜா (ரலி) அவர்களும் அறிவின் அன்னை ஆஇஷா(ரலி) அவர்களும் வெறும் ஏடுகளிலும் இறுவட்டுக்களிலும் மட்டுமே வாழ்ந்து விட்டுப் போகட்டும் என்ற அலட்சியம் சமயங்களில் இறுமாப்பாய்க் கூட ஆகிவிடுகிறது.

இப்போதெல்லாம் பெண்களைப் பற்றியும் அவர்களின் பிரச்சினைகளைப் பற்றியும் எழுத முன் ஒரு கணத்தை சிந்தனைக்குக் கொடுத்து விட வேண்டிய நிர்ப்பந்தம்.சிறுவர்களைப் பற்றி எழுதுபவர்களை யாரும் சிறுவர்நல வாதி என அடையாளப்படுத்துவதில்லை.

ஏழைகளைப் பற்றிப் பேசுபவர்களுக்கு விசேட பெயரெதுவுமில்லை; எனினும் பெண்களைப் பற்றிப் பேசினாலே பெண்ணிலைவாதி என்ற பெயர் வந்து விடுகிறது.

சமீபத்தில் ஒரு திரைப்படம் வெளிவந்தது. ஆங்கிலம் தெரியாத ஒரு குடும்பத்தலைவி அருமையான மனைவியாகவும் அன்பான தாயாகவும் இருக்கிறாள்.வீட்டிலேயே அருமையான லட்டு தயாரித்து விசேட வைபவங்களுக்குக் வழங்கி வரும் அந்தப் பெண்ணுக்கு ஆங்கிலம் தெரியாது:அவள் வெளியில் சென்று வேலை பார்க்கவில்லை. இப்படி இப்படியான காரணங்களினால் குடும்பத்திற்கும் அவளுக்குமிடையே கண்ணுக்குத் தெரியாத வேலியொன்று வளர்கிறது.வளர்ந்த மகள் தான் படிக்கும் ஆங்கில் மூலப் பாடசாலைக்கு தாய் வருவதை வெறுக்கிறாள்; என் மனைவி லட்டு செய்யவே பிறந்திருக்கிறாள் எனப் பேசி அவளின் மற்றைய ஆற்றல்களை புரிந்து கொள்ள மறுக்கிறான் கணவன். குடும்பத்தின் ஆயிரம் அலுவல்களைச் செய்து வரும் அந்தப் பெண் மனதில் விரக்திக்கும் வெறுப்புக்கும் இடைப்பட்ட ஒரு வெற்றிடம் தோன்றுகின்றது.சுயம் இழந்த அந்தப்பெண் ஆங்கிலம் படிப்பதும் பின் தான் லட்டு தயாரிக்கும் ஒரு தொழிலதிபர் என்பதைப் புரிந்து கொண்டு தன்னை நேசிக்கத் தொடங்குவதுமாய் கதை தொடர்கிறது.கதைகளும் திரைப்படங்களும் நிஜவாழ்வின் கண்ணாடிகள் எனினும் அவற்றின் முடிவுகள் நிஜ வாழ்வில் நடைபெறுவதில்லை என்பது சோகமயமான உண்மை.

'எனக்கென்றோர் உலகம் இருக்கிறது'
சமீலா யூசுப் அலி.

No comments:

Post a Comment