Friday, May 22, 2015

பள்ளிவாயலில் ஒரு பெண்


Shameela Yoosuf Ali


வாழ்க்கையிலே இன்று ஒரு விசேசமான வித்தியாசமான நாள்.

இலங்கையிலிருந்து பலகாலமாக ஏங்கியும் கிடைக்காத ஒன்று இங்கிலாந்தில் வந்து பெற்றுக் கொண்டேன்.

ஜும்ஆத் தொழுகை

பெருநாள் தொழுகை, அதைத் தான் கூட்டாக பள்ளிவாயலின் பரந்து விரிந்த பரப்பொன்றில் தொழுதிருக்கின்றேன்.எல்லோரையும் கட்டியணைத்து வாழ்த்துக் கூறக் கூட இடமளிக்காமல் விரட்டும் கசப்பு அனுபவங்கள்.

‘அல்லாஹ்வே இதையெல்லாம் நீ பார்த்துக் கொண்டு தானே இருக்கிறாய்’ மனசுக்குள் கோபம் கிளர்ந்தெழும்;பேச முடியாது.

மஸ்ஜித் கொள்ளாமல் பெண்கள். தோளோடு தோள் சேர்ந்து தொழுகைக்காக நின்ற போது கண்ணில் நீர் முட்டுவதைத் தவிர்க்க முடியவில்லை. மார்க்கத்தின் பெயரால் எத்தனை ஆண்டுகள் இந்த இன்பத்தை சுகிக்க விடாமல் எங்களைத் தண்டித்திருக்கிறீர்கள்?

வீட்டின் ஒதுங்கிய மூலையில் தொழுவதை விட இந்த விசாலித்த பரப்பில் ஏனையவர்களோடு என் இறைவனிடம் பேசும் போது எத்துணை சுதந்திரமாக பாதுகாப்பாக இருக்கிறது என்பதை என் சர்வாங்கமும் உணர்கின்றது.

சுஜூதில்’ நிறைவாக என் உள்ளம் இந்த வாய்ப்பை தந்ததற்காக இறைவனைப் புகழ்ந்து கொண்டேயிருந்தது.

அஸ்ஸலாமு அலைக்கும் என்ற அன்பின் முகமன், அறியாதவர்களையெல்லாம் ஒரே விநாடியில் நேசர்களாக்கும் விசித்திரம்.நிறங்கள்,இனங்கள், மொழிகள் எல்லாவற்றினையும் தாண்டிய சகோதரத்துவ உறவின் வெளிப்பாடுகள்.ஒரு பள்ளிவாயலும் ஒரு ஜும்ஆவும் எனக்குக் கற்றுத் தந்த பாடங்கள்.

வெளியுலகத்திற்காக அணியும் வேஷங்கள் அத்துணையும் களைந்து வெறுமையாக நிற்கும் இடம் இதுவல்லவா?

குத்பாக்களால் தூங்கிய ஈமானிய உணர்வுகள் வாராந்தமேனும் தட்டியெழுப்பப் படும் அல்லவா?

இந்த நிம்மதி,இந்த அமைதி, இந்த கடலெனப் பொங்கும் உணர்வுகள் நம் பெண்களுக்கும் வேண்டாமா?

by சமீலா யூசுப் அலி
2015 Feburary 14

No comments:

Post a Comment