Wednesday, October 15, 2014

யார் முதியவர்கள்- முதியோர் தினம் சார்ந்து ஒரு பகிர்வு



Shameela Yoosuf Ali


யார் முதியவர்கள் என்பது பற்றி இன்னும் சரியான தெளிவில்லை.


பேராதனைப் பல்கலைக்கழக நூலகத்தில் ‘வயதாவதின் சமூகவியல்’

(Sociology of Ageing) என்றோர் நூல் இருக்கிறது.நான் அடிக்கடி விரும்பி நுகரும்

புத்தகம் அது.


அந்த நூல் சொல்கிற சில விடயங்கள் மிகச் சுவாரசியமானவை.உலகின் 70

வயது தாண்டியவர்களில் 70 வீதமானவர்கள் தங்களுக்கு வயதாகி விட்டது
என்பதை ஏற்றுக் கொள்வதில்லையாம்.நோய்கள் இல்லையெனில் 80 வயது வரை மனித உடல் தளர்ச்சி கொள்ளாமல் உறுதியோடு இருக்கும்;நோய்களே இல்லாத போதும் 80 வயதுகளைக் கடக்கும் போது முதுமைக்கான பலவீனம் உடலில் தோன்ற ஆரம்பிக்கும் என்று இன்னோர் ஆய்வு சொல்கிறது.


உற்றுப் பாருங்கள்.எண்பதுகளிலும் இருபதுகளின் துடிப்போடு இருக்கும் வயதான இளைஞர்களும்,இருபதிகளிலேயே எண்பதின் களைப்போடு இருக்கும் இளைய முதியவர்களையும் நம்மத்தியில் ஏராளமாகக் காணலாம்.


வயதுத்துவம் Ageism எனப்படுவது தனிநபர்கள் அல்லது குழுக்களை அவர்களது வயதை அடிப்படையாக வைத்து ஒரே மாதிரியானவர்களாக அல்லது ஒரே இயல்பைக் கொண்டவர்களாக அடையாளப்படுத்துவதும் ,வயதை மையமாக வைத்து அவர்களுக்கு பாகுபாடு காட்டுவதுமாகும்.இந்தச் சொல்லை ரொபர்ட் நீல் பட்லர் எனும் சமூகவியலாளர் 1969 இல் வயதானவர்களுக்கெதிரான வேறுபாடுகளை விவரிக்கப் பயன்படுத்தினார்.


உயிரியல் வயது என்பது முழுக்க முழுக்க உடல்சார்ந்தது.ஆன்மாவுக்கு வயது கிடையாது.இதை மிகச் சிலரே புரிந்து கொள்கிறார்கள்.


சிலருடன் சம்பாஷித்துக் கொண்டிருக்கும் போது அவர்களுக்கு உங்கள் வயது என்ன என்று தெரிந்தாக வேண்டும்;அதை விதவிதமான வழிகளில் கேட்டு வைப்பார்கள்;புரிந்தும் புரியாதாது போன்று கேட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு உள்ளுக்குள் சிரிப்பு பொங்கும்.


முதுமை அழகானது, ஆழமான அனுபவங்களால் ஆளப்படுவது.நரைத்த முடிக்கு சாயம் தடவுவார்கள் சிலர்;பிழை இல்லை.வெண் கூந்தலை கம்பீரமாகக் கருதுவார்கள் இன்னும் சிலர்.


அந்தந்த வயதுகளுக்குரிய நிறைந்த சிறப்பம்சங்கள் இருக்கின்றன.அதை மகிழ்வோடு ஏற்றுக் கொண்டாலே வாழ்க்கை அற்புதமாகி விடும்.


மனது அதை நினைக்கிறதோ அதாகவே ஆகி விடுகிறோம்.


சிறகு கட்டிப்பறக்கும் மனசுக்கு வயசில்லை.


சாதிக்க நினைக்கும் காட்டருவிகள் தடைகளை உடைத்துக் கொண்டு புதிய பாதைகளில் பயணிக்கின்றன.


ஆமாம், உங்கள் வயது என்ன?


2014 October 1st
by Shameela Yoosuf Ali