Saturday, May 23, 2015

கண்ணாடி மீன்கள்




Shameela Yoosuf Ali


நிலவொளி இரவுகளையோ
சமுத்திரத்தின் கர்ப்பத்திலுள்ள முத்துக்களையோ
பற்றிய அறிவு அதற்கில்லை.

அதுவோர் கண்ணாடி மீன்.
அதைச் சுற்றிய கைதட்டல்கள் பற்றி கர்வித்திருந்த்து.

எல்லையிலாப் பெரு வெளிகள் தாண்டி
வலிக்க நீந்திச் செல்லும் மீன்களைப் பற்றியும்
எதிர்பாராத மர்மங்கள் தரும் விடுதலை பற்றியும்
அதற்கெந்த கிளர்ச்சியும் இல்லை.

கண்ணாடித் தொட்டிக்கப்பால் அதிகபட்சம்
வரவேற்பறை உலகம்.

அண்டசராசரங்களையே சுற்றி வருவதாய்
ஒற்றையாயொரு சோழிக் கிழிஞ்சலை சுற்றி வந்து கொண்டிருந்தது.
.
ஒக்சிஜனையே செயற்கையாய் நுகர்ந்து கொண்டிருக்குமதற்கு அமாவாசை இரவுகளின் அலைப் பெருக்கென்ன தெரியும்?

அகன்றலையும் வானம் பார்த்து கடல் நுகரும் கனவுகள் கூட அதற்கு வந்ததேயில்லை.

அகழ் சமுத்திர மீன்கள் அலட்டாமல் நீந்திச் சென்று கொண்டிருந்தன,
முடிவறாத காலங்கள் தாண்டி....

கண்ணாடி மீனோ அகம்பாவத்துடன் சுதந்திரம் பற்றி பேசிக் கொண்டேயிருந்தது.

சமீலா யூசுப் அலி
19, April 19, 2015

No comments:

Post a Comment