Saturday, May 23, 2015

நிறைவான மணவாழ்விற்கு… சில ஆலோசனைகள்




• உங்கள் துணைவியும் நீங்களும் ஆண்,பெண் என்ற இரு வேறு உலகை பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.ஆணும் பெண்ணும் ஒரே சொற்களைப்பாவித்தாலும் அர்த்தங்கள் வேறுபடும். மனைவி ‘நீங்கள் ஒன்றுமே செய்யவில்லை’ எனக்கூறும் போது அதன் அர்த்தம் கணவன் எப்போதுமே எதுவுமே செய்யவில்லை என்பதல்ல.

• நீங்கள் உங்கள் வேலைகளின் மத்தியிலும் அன்றாடம் ஒரு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்த மறக்க வேண்டாம்.துணைவி/துணைவரின் நாள் எப்படி என்று கேட்பதோடு உங்கள் அன்பை வெளிப்படுத்தும் குறுஞ்செய்திகள் அவர்களை மகிழ்ச்சிப்படுத்தும்.


• வாரமொரு முறை இருவரும் சேர்ந்து ஓரிடத்திற்குச் செல்வதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்அது ஒரு உறவினர் வீடாக இருக்கலாம்,சுற்றுலாத்தலமாக இருக்கலாம் அல்லது ஒரு புத்தகக்கண்காட்சியாக இருக்கலாம்.

• உங்கள் துணை எந்த மனோநிலையில் இருக்கிறார்,அவரது பிரச்சினை என்ன என்பதைப் புரிந்து கொண்டு அதற்கு கரங்கொடுத்து உதவி செய்யுங்கள்.

• செவிமடுங்கள், அதிகமான கணவர்கள் செவிமடுப்பதில்லை என்பதும் ,மனைவியர் அதிகமாகத் பேசுகின்றார்கள் என்பதும் வழக்கமான குற்றச்சாட்டாகும்.செவிமடுக்கும் போது என்ன சொல்கிறார்கள் என்பதை விட என்ன சொல்ல வருகிறார்கள் என்பதற்கு அதிக கவனம் கொடுங்கள்.


• குடும்பத்தின் வரவையும் செலவையும் இருவரும் சேர்ந்து திட்டமிடுங்கள்.அவரே செலவைப்பார்த்துக் கொள்ளட்டும் என்று மனைவியும்,அவளுக்கென்ன தெரியும் என்று கணவனும் உதாசீனமாக இருப்பது உறவில் விரிசலை ஏற்படுத்தும்.வரவும் செலவும் அதன் கோலங்களும் குடும்பங்களின் பிரச்சினைகளுக்கு ஆணிவேராக அமைகின்ற அம்சங்களாகும்.

• உங்கள் துணையின் இலட்சியம்,தொழில் மற்றும் சுயவளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பதோடு உங்களால் முடிந்தளவு உற்சாகத்தை வழங்குங்கள்.

• பரிசுகள் அன்பை வளர்க்கும்.இடைக்கிடை சில சின்னச் சின்ன பரிசுகளை வழங்குவதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

• பரஸ்பரம் மன்னித்துக் கொள்ளுங்கள்.தவறுகள் மனித வாழ்வில் தவிர்க்க முடியாதவை.மன்னிப்பது உங்கள் பெருந்தன்மையைக்காட்டுவதோடுமன்னிக்கப்பட்டவரிடம் உங்களை உயர்த்
திக்காட்டும்.

• பேசும் போது இனிமையான,அழகான சொற்களைப்பயன்படுத்துங்கள்.உங்கள் துணைவி அல்லது துணைவரை உண்மையான உள்ளத்தோடும் நேசியுங்கள்.

No comments:

Post a Comment