Sunday, May 24, 2015

சிந்தனைகள் அகலப்படட்டும்.


Shameela Yoosuf Ali

எனக்கென்றோர் உலகம் 9


அனேகமான மேலைத்தேய சிந்தனைவாதிகளால் பேசப்படுகின்ற பெண்ணியத்திற்கும் நாம் முன்வைக்கும் பெண் வளவாக்கம் என்னும் கருத்தியலுக்கும் நிறையவே வித்தியாசம் இருப்பதை உணர்ந்துகொள்ள முடியும்.

மேலைத்தேயப் பெண்ணியம் மிகுந்த சிக்கல்வாய்ந்த ஒரு கூட்டுத்தொகுதியாகும். அங்கே தெரிவிக்கப்படுகின்ற மூலதத்துவங்கள் சிலபோது பெண்களை அசிங்கப்படுத்துவதாகவும் அமைந்துவிடுகின்றன. “பெண்ணுரிமை” என்று பேசும் சில பெண்ணியவாதிகள் ஆண்களோடு போட்டி போடுவதையும், ஆண்களை எதிரிகளாகப் பார்ப்பதையுமே பெண்ணுரிமை என்ற தவறுதலான புரிதலைப் புகுத்தி வருகிறார்கள்.

அதாவது பெண்ணுரிமை என்பது ஆணுக்கும் பெண்ணுக்குமான முடிவுறாப்போராட்டமாக சித்தரிக்கப்படுகின்றது. தங்களது விருப்பங்களை வெளிக்காட்டவோ அல்லது இறைவன் தந்திருக்கும் உரிமையொன்றை பெற்றுக்கொள்ளவோ தடை ஏற்படுத்தும் அல்லது மறுக்கும் அல்லது எதிர்க்கும் ஆதிக்க மனப்பான்மை தான் எதிர்க்கப்பட வேண்டியது. இந்த ஆதிக்க மனப்பான்மை ஆண்களிடத்தில் இருந்தாலும் சரி, பெண்களிடத்தில் இருந்தாலும் சரி.

மேலைத்தேயப் பெண்ணியம் பேசும் எல்லாக் கருத்துகளுடனும் நாம் உடன்படுகின்றோம் என்றோ அல்லது முழுமையாக முரண்படுகின்றோம் என்றோ அர்த்தம் கொள்தல் ஆகாது.

*மேலைத்தேய பெண்ணியம் சார்ந்த கருத்துகளோடு எம்மால் உடன்பட முடியாமைக்கான காரணிகளாக பின்வருவனவற்றை அடையாளம் செய்ய முடியும்.

*தெய்வீக வழிகாட்டல் இன்மை- அதாவது வஹியின் வழிகாட்டல் இன்மை.

*முதலாளித்துவ, அல்லது சமவுடமைவாத வர்த்தக மயப்படுத்தப்பட்ட தன்மை.

*ஆண்-பெண் முரண்பாட்டினைத்தோற்றுவிக்கஏதுவாக செயற்படுதல்

*பெண்மையின் இயல்புகளை மறுதலிக்கின்ற தன்மை

சிலபோது நாம் மேலைத்தேய பெண்ணிய கருத்துகளோடு உடன்படுகின்றோம். அது, பெண்ணியம் சார் கருத்துக்கள் இறை வழிகாட்டலின் அடிப்படையிலான பெண் மேம்பாடு, பெண் பாதுகாப்பு சார்ந்த கருத்துகளோடு உடன்பட்டு இயைந்து செல்கின்ற போதாகும்.

பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற எல்லா விதமான வன்முறைகளையும் இன மத தேச வேறுபாடுகளைக் கடந்து எதிர்க்கின்றோம் கண்டிக்கின்றோம்.உலகளாவிய ரீதியில் பெண்களின் அடைவுகளை மெச்சுகின்றோம். வாழ்த்துகின்றோம், துணை நிற்கின்றோம். இதுவே மேலைத்தேய பெண்ணியம் சார் ஒரு முஸ்லிமின் நிலைப்பாடாகும்,

எமது பெண் மேம்பாடு குறித்து சிந்தித்துச் செல்கையில் ஒரு பெண்ணுக்கு பின்வரும் வாய்ப்புக்கள் தடையின்றி வழங்கப்படல் வேண்டும்.

* கல்வி கற்றல் சுதந்திரம் (அடிப்படை ஆரம்ப கல்வி, உயர் கல்வி, பட்டப்படிப்பு, பட்டமேல் படிப்பு, தொழில் சார் கல்வி).

* திறன்களை விருத்தி செய்வதில் முழுமையான சுதந்திரம் (விளையாட்டு, தலைமைத்துவம், தொடர்பாடல், முகாமைத்துவம், போன்ற எல்லாத்துறைகளிலும்)

* முழுமையான தொழில் சார் உரிமை வழங்கப்படவேண்டும், தனது இயல்புக்கும் மார்க்கத்தின் வரையறைகளையும் பேணும் நிலையில் அவள் விரும்பும், அவளுக்கு இயலுமான தொழிலை மேற்கொள்வதற்கும் அதனால் ஈட்டப்படும் வருவாயை பெற்றுக்கொள்ளவும் உபயோகிக்கவும் அவளுக்கு முழுமையான சுந்தரம் வழங்கப்படவேண்டும்.

* முடிவுகள் மேற்கொள்ளப்படும் எல்லா சந்தர்ப்பங்களிலும் பெண்களுக்கு சமமான பங்குபற்றல் வழங்கப்படவேண்டும். குடும்ப மட்டத்தில் சமூக மட்டத்தில் அதற்கான வாய்ப்பும் சுதந்திரமும் பெண்ணுக்கு வழங்கப்படவேண்டும்.

* இவ்வாறான நிலைகளின் போது பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பும் அரவணைப்பும், அங்கீகாரமும், அணுசரணையும் உறுதி செய்யப்படவேண்டும்.

பெண் வளவாக்கம் அல்லது பெண் மேம்பாடு என்பதனூடாக நாம் அடையாளப்படுத்தும் கருத்துகளாகும். இவை இஸ்லாத்திற்கும் அல்லாஹ்விற்கும் மாற்றமானவை அல்ல, இவை எம்மை சுவனத்திற்கு அழைத்துச் செல்வதை விட்டும் தடுக்கக்கூடயவையும் அல்ல.

அல்லாஹ்வின் தூதைச் சுமந்து இந்த உலகத்தை வளப்படுத்தி அமைதியும் சுபீட்சமும் நிலவும் பூமியாய் அன்பும் கருணையும் வாழும் இல்லங்களாக மாற்றிடும் வல்லமை எம் கரங்களிலேயே இருக்கிறது. ஆணா பெண்ணா என்ற கேள்வியை விட ஆளுமையும் மனிதநேயமும் மிக்க மனிதனா என்ற வினாவே முக்கியம் பெறுகிறது.

மாற்றங்களின் வித்து மனசுகளில் தான் முதலில் ஊன்றப்பட வேண்டும். வேரும் விழுதும் ஊன்றிய விருட்சம் சின்ன விதைக்குள் தான் சிறைப்பட்டிருக்கின்றது.

சிந்தனைகள் அகலப்படட்டும்; புதிய கதவுகள் திறக்கப்படட்டும் இன்ஷா அல்லாஹ்.


முற்றிற்று.

எனக்கென்றோர் உலகம் இருக்கிறது'

No comments:

Post a Comment