Saturday, April 25, 2015

2015 சில கனவுகள்



Shameela Yoosuf Ali

என்னால் நொந்த மனங்களுக்கு தொலைவிலிருந்தாவது ஒத்தடம் அனுப்ப வேண்டும்.

வலிகளையும் அதைத் தந்தவர்களையும் மன்னிக்கும் பெருமனது வேண்டும்.

இரண்டு மூன்று புத்தகங்கள் எழுத வேண்டும்.

மொத்தமாய் முந்நூறு நூற்களுக்குள் சிறைப்பட வேண்டும்.

என் தேசம் மைத்ரீ யுகம் காண வேண்டும்.

எல்லோர் பற்றியும் நல்லெண்ணம் கொள்ளும் உயர்ந்த உள்ளம் வேண்டும்.

அல் குர் ஆனுடன் இன்னும் இன்னும் ஆழமான பற்றுணர்வு வேண்டும்.

என் பெற்றோரின் கனவுகளுக்கு இறக்கைகள் இல்லா விட்டாலும் இருக்கைகளாவது அமைத்துத் தர வேண்டும்.

கைநிறைய சம்பாதிக்க வேண்டும்; இல்லாத முகங்களில் அந்தக் காசுகள் கொண்டு வரும் வெளிச்சத்தை ரசிக்க வேண்டும்.

சைக்கிளில் உலகம் சுற்றும் நெடுநாள் ஏக்கம் நிறைவேற வேண்டும்.

சின்னதாய் ஒரு வீட்டுத் தோட்டம் ,கையலக நிலத்தில் டேஸியும் ரோஜாக்களும் போதும்.

ஒரு நூறு பெண்களை வலுப்படுத்தி வளப்படுத்துவதற்கான வாய்ப்பும் வல்லமையும் வேண்டும்.

‘நான் காணும் ஐக்கிய ராச்சியம்’ 100 நாள் தொடராய் எழுதும் உந்துதலும் ஊக்கமும் வேண்டும்.

என் எழுத்துக்கள் மூலம் பாறை உள்ளங்களில் நீர் கசிய வேண்டும்,வாசிக்கும் தொய்வுற்ற நரம்புகளில் துடிக்கின்ற இளமையின் உறுதி மீண்டும் பிறக்க வேண்டும்.

கோடைக்காலப் பின்னிரவில் நதியொன்றில் மிதக்கும் சிறகாக ஓடப் பயணம் வேண்டும்.


ஒரே ஒரு நாளாவது 24 மணிநேரம் விடாமல் கவிதை அருவி பொங்கி வழிந்து கொண்டேயிருக்க வேண்டும்.

குழந்தை இலக்கியம்,குழந்தை உளவியல் என்று படித்ததையெல்லாம் ஒருவருக்காவது சொல்லிக் கொடுக்க வேண்டும்.

குறைந்தது 100 புதிய புத்தகங்கள் விலை கொடுத்து வாங்க வேண்டும்.


மீன்களிடம் நீச்சல் கற்றுக் கொள்ள வேண்டும்.

விடுமுறையில் வீட்டுக்குப் போய் உம்மாவின் பொரித்த இறைச்சியுடன் பச்சை மிளகாய் கடித்து தட்டு நிறைய நாட்டரிசிச் சோறு வேண்டும்.

எதிர்பாராத் தருணங்களில் சின்னச் சின்னதாய் அன்பளிப்புக்கள் அனுப்பி துளிர்க்கும் மகிழ்ச்சி காண வேண்டும்.


ஒவ்வொரு வாரமும் வீட்டுக்கொரு அஞ்சல் அட்டை.அதில் சொந்தக் கை எழுத்துக் கோர்த்தனுப்ப வேண்டும்.


வருமென் பிறந்த நாள் முதியோர் இல்லமொன்றில் வயசான இளசுகளுடன் கழிய வேண்டும்.

இருபத்து நாலு மணி நேரம் ஒரு வார்த்தை பேசாமல் மெளனத்தைப் பேசவிட்டுப் பார்க்க வேண்டும்.

குழந்தைகளோடொரு குழந்தையாய் குதூகலிக்கும் வெள்ளை உள்ளம் வேண்டும்.

கன்னத்தில் அறைந்தாலும் கண்ணீரோடு சிரிக்கும் கலங்காத மனசு வேண்டும்.

எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றுபவர்களுக்கெல்லாம் தண்ணீர் வாங்கிக் கொடுக்க வேண்டும்.

நிலம் தாண்டி வளர்ந்தாலும் நிலம் நோக்கித் தாழும் பணிவான குணம் வேண்டும்.

iஇன்னும் முகநூலில் சொல்லாத,பிரத்தியேக விடயங்கள் எல்லாமே தப்பாமல் நடந்தாக வேண்டும்.

இன்ஷா அல்லாஹ்.

Copyrights@ShameelaYoosufAli