Friday, May 22, 2015

வித்யா எங்களை மன்னித்து விடு.


கனவுகளின் ஒடங்களில் நாங்கள் நீந்திச் சென்றதோர் பொழுதொன்றில்
நீ கடத்தப்பட்டாய்.
நாங்கள் மாலைத் தேநீரை ருசித்து அருந்திக் கொண்டிருந்தோம்.
உன் கைகள் பின்புறம் கட்டப்பட்டன.
நாங்கள் கடைவீதிக் கண்ணாடிகளால் குதியுயரக் காலணிகளை ரசித்துக் கொண்டிருந்தோம்.
நீ சிதைக்கப்பட்டாய்.
நாங்கள் வீடு திரும்பிக் குழந்தைகளைக் கொஞ்சினோம்.
மீண்டும் சிதைக்கப்பட்டாய்.
நண்பிகளுடன் தொலைபேசியில் நீண்டதாய் ஒர் அரட்டை.
இன்னுமொருமுறை சிதைக்கப்பட்டாய்.
நாங்கள் குளியலறைக்குள் நுழைந்தோம்.
நீ கொடூரமாய்க் கொலை செய்யப்பட்டாய்.
அந்த எட்டுக் கோழைகளையும் மிருகங்கள் என்று கூற விரும்பவில்லை.
மிருகங்கள் அன்பும் உள்ளார்ந்த உணர்வுகளும் பொருந்தியவை.
அரக்கர்கள் என்றும் கூறக் கூடாது;அம்புலி மாமாக் கதைகளில் இரக்கம் பொருந்திய அரக்கர்களையும் வாசித்திருக்கிறேன்.
பதினெட்டு வருடங்கள் அனுபவிக்காத் துயர் அனைத்தும் அந்தக் கணம் உன் உடலும் உள்ளமும் அனுபவித்திருக்கும்.
நீ உன்னைக் காப்பாற்ற முடியாது போன உலகத்தை சபித்திருப்பாய்.
நீ கடைசியாக என்ன சொல்ல விரும்பினாய் என்பதைக் கேட்கும் திராணி எங்களுக்கில்லை.
இந்தக் கொலைக் கொடூர மனசுகள் எப்படி ஒரு தாய்க்குப் பிறந்து அவள் பாலருந்திய மனிதர்களுக்குள் வாய்க்கின்றன; புரிவதே இல்லை.
பெண்ணை சக ஆத்மாவாகவல்லாமல் சதையாக பார்க்கப் பழக்கப்பட்டிருக்கும் மனிதர்கள் நிரம்பிய உலகொன்றில் மூன்று வயதுப் பிஞ்சுக்கும் எழுவதைத் தாண்டிய மூதாட்டிக்கும் கூட இருத்தல் பேரச்சத்துக்குரியதே.
வித்யா எங்களை மன்னித்து விடு.
சமீலா யூசுப் அலி
மே மாதம் 13 ஆந்திகதி
யாழ் புங்குடுதீவு மகாவித்தியாலத்தின் உயர்தரவகுப்பு மாணவி வித்தியா சிவலோகநாதன் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டார்)

No comments:

Post a Comment