Sunday, September 6, 2015

அவளுடைய இறக்கைகள்



Shameela Yoosuf Ali

அவளுக்கு இறக்கைகள் இருப்பதாக பலகாலம் அவளுக்கே தெரியாது.

இறக்கைகள் சைத்தானுக்குரியவை என்று தான் அவளுக்குச் சொல்லப்பட்டது.
தேவதூதர்களுக்கும் அவை உண்டென அவளாகத் தான் அறிந்தாள்

இறக்கைகளின் அபாயங்களையும் வான்பரப்பில் அவள் சந்திக்கக் கூடிய துர்சொப்பனங்கள் பற்றியும் வாய் வலிக்கச் சொன்னார்கள்.


வேண்டாமென்று சொல்லச் சொல்ல வேண்டும் வேண்டுமென்று மனசு அடம்பிடிக்கும்.
அவளுக்குள்ளும் இறக்கை கொண்டு பறத்தல் பற்றிய ஆசை கிளர்ந்தது.

அவளுடைய இறக்கைகள் ஒளித்து வைக்கப்பட்டிருந்தன.

கடந்த காலத்தின் தூசு நிரம்பிய பரணொன்றில் அவை அடங்கிக் கிடந்தன.

உனக்கு அனுபவம் போதாது அல்லது உன்னால் இந்த வயதில் பறக்க முடியாது இப்படி இருவகையில் சொல்லிப் பார்ந்தார்கள்.

அவளுக்கு அணிவிக்கப்பட்டிருந்த ஆபரணங்களைக் களைந்தாள்.

இறக்கைகளைத் தூசு தட்டினாள்; சுற்றியிருந்தவர்கள் இருமத் தொடங்கினார்கள்.

இறக்கைகளில் ஜீவகளை நிரம்பியது.

அவள் பறக்கத் தொடங்கினாள்.
மிக நிம்மதியுடனும் அதீத வேகத்துடனும் அவள் மேலெழுந்தாள்.

வானம் நினைத்ததை விட மிக மிக விசாலித்திருந்தது

சமீலா யூசுப் அலி
February 20, 2015

Saturday, September 5, 2015

உங்களுக்குமொரு வீடுண்டா?


Shameela Yoosuf Ali

வீடுகளுக்கு உயிருண்டா அறியேன்
சுவர்களில் காதைப் பொருத்துங்கள்
உயிர் ததும்பும் இளஞ்சூட்டினை உணர்கிறேன்.

நேசம் மிகுந்ததோர் மனிதனைப் பிரியும் போதான வேதனை போன்றோ
அல்லது அதை விட கொஞ்சம் குறைவாகவோ
வீடுகளை விட்டுச் செல்லும் போதெற்படும் வெறுமை உறுத்துகிறது.


பயணங்களில்...
அந்துவான வெளிகளில் தனித்திருக்கும் வீடுகளைப் பார்க்கும் போது
இலேசான பதட்டம் தொற்றிக் கொள்கிறது.

ஒரு காலத்தில் சிண்டும் நண்டுமாய் மிதிபட
இண்டு இடுக்கெல்லாம் கலகலப்பு சிந்திக் கிடந்த வீடுகளின்
இப்போதைய மெளனம் தாங்கொணாமல் விரைவில் வீடு திரும்புகிறேன்.

வீடுகள் தனித்துவமானவை.
சில வீடுகளை கண்டவுடனேயே பிடித்துப் போகின்றன.
சிலவற்றை எப்போதுமே பிடிக்காமல் போய் விடுகின்றன.

முஸல்லாவில் தலை வைத்து இறைவனுடன் சண்டை பிடிக்கும்
தொழும் மூலை.
சின்னக் கோபங்களில் அறைந்து சாத்தப்படும் வலி சுமந்த அறைக்கதவுகள்.
குளிக்கின்ற தனிமையில் சிரித்து வைத்து சாயம் மங்கிய கண்ணாடியைத் தாங்கியிருக்கும்
வெதுவெதுப்பான குளியலறை.
தாளிதங்களின் வாசனைகள்,அடிப்பிடித்த சோறு எண்ணெய் சித்திரங்கள் வரைந்த அடுப்பங்கரை
கொண்ட சமையலறை.
மன்னிக்கவும் சகலதுக்குமான அறை.

அதிகாலையில் யன்னல் திறக்க ஊவென்று உட்புகும் கூதல் காற்று
அடுப்பில் தேநீருக்காய் கொதிக்கும் கேத்தல் சூடாய் சுவாசிக்க
மேலெழும் கதகதப்பான ஆவி...

நாள் முழுக்கக் களைத்து உள்நுழையும் போது
கால் நீட்டி புத்தகமும் கோப்பிக் கோப்பையுமாய்
சிறுதுயில் கொள்ளும் வரவேற்பறை.

யன்னல் சடசடக்க நீலமும் ஊதாவுமாய் வானம் பார்த்து டயறி எழுதும்
மேற்கு மூலை.

நிலாக்காயும் முன்னிரவுகளில் வலுக்கட்டாயமாய் விரிந்திருக்கும் நட்சத்திரங்கள் பதித்த
ஆகாயம் படர்ந்திருக்கும் படுக்கையறை.

தனிமையாய் இருக்க நினைக்கும் நொடிப் பொழுதுகளில் அரவங்கள் அற்றதாய்
வரவேற்கும் ஆளில்லாத வீடு.

ஒரு வீட்டைப் பிரியும் போது வலிக்கிறது.
அது சொந்தமாய்த் தான் இருக்க வேண்டுமா..
கூலி வீடாய் இருந்தால் கூட வலிக்கிறது.

நினைவுகளின் வேர்கள் படர்ந்திருக்கும் சுவர்களையோ
துக்கம் தொண்டை அடைக்கும் கண்ணீர்த்துளிகளையோ
சந்தோஷப் பொழுதுகளின் ஆனந்தச் சிணுங்கல்களையோ
பெயர்த்துச் செல்ல முடியாத இயலாமை
நிரம்பவும் வலி தருகிறது.

2014 November 3
By shameela Yoosuf Ali

Friday, September 4, 2015

தேடல்


Shameela Yoosuf Ali

தேடலின் ஒரு ஆயாசப் பொழுதில்
கோடை வாழ்க்கையின் மழைக்கால வர்ஷிப்பாய்
ஆன்மாக்கள் சந்தித்துக் கொள்கின்றன…



ஆன்மாக்களின் உலகம்
கூடுகளுக்குள் படபடக்கும் உயிர்க்குருவிகள்.
கூட்டாய் ஏகாந்தமாய் இன்னொன்றாய் இவ்விரண்டாய்…
அன்பும் வெறுப்பும் காதலும் கனிவும் கோபமும் கலந்து கலந்து…
விருட்சக்கிளைகளில் அந்தமில்லாப் பொழுதொன்றில்
கனவின் சாயல்களாய்
ஒட்டிக் கொண்டிருந்த இறகுகளின் மிச்சம்

பூமி தொட்ட பின்
மறந்திருந்த நினைவுத்துகள்கள்
ஆன்மாக்கள் சந்திக்கும் தேவ விநாடிகளில்…
நிலம் கிளர்த்தி மேலெழும் செடி முளைகளாய்
சர்வ நிச்சயமாக ஞாபகத்துக்கு வருகின்றன.

பிறப்பினை விட வாழ்க்கைக்கு ஆதி வயது
மரணமெனும் பூட்டப்பட்ட வாயிலுக்கு அப்பாலும்
அது விரிந்தே கிடக்கிறது.

சமீலா யூசுப் அலி
2014 Oct 28

Thursday, September 3, 2015

ஆன்ம விசாரணைகள்


Shameela Yoosuf Ali


அவர்கள் வந்தார்கள்;
கதவுகளைத் தட்டினார்கள்.
வழமையான தட்டல் போலயிருந்தாலும் அது வழமையான தட்டல் அல்ல.

சுகநல விசாரிப்புகளுக்குப் பின்னர் எல்லையற்று விரியும் சிந்தனைப் பெருவெளி நோக்கி நடக்கத் தொடங்கினோம்.

எதுவும் திட்டமிடப்படவில்லை.

புனைவுகள் முலாம்களுக்கு அப்பால் ஆன்மாக்களால் மட்டுமே சிறகடிக்கக் கூடிய காலத் துணுக்கு அது.

ரசம் பொருந்திய திராட்ச்சைகளை விட ஆன்ம விசாரணை போதையூட்டக் கூடியது.

காலத்தின் அடங்காத ஓட்டத்தில் நிதானித்துப் பருகக் கூடிய நீர்ச்சுனைகளுக்கருகே தாமதித்தோம்.

சிறகுகளை விரித்து மேலெழுந்த போது கீழே பூமி புறக்கணிக்கத்தக்க
புள்ளியாய் தெரிந்தது.

விவரிக்க முடியாததோர் வானம் விரிந்திருந்தது.
திடீரென பயணம் அறுந்தது.

சொல்லாமல் கொள்ளாமல் சென்று விட்டிருந்தார்கள்,
அழகான முலாம் பூசிய வார்த்தைகள் மட்டும் மூலையில்
அறுந்த செருப்புகளாய் கிடந்திருந்தன.

பொய்களூடு ஒளிந்திருக்கும் உண்மை
நிர்வாணமாய்த் தான் இருக்கிறது.

By Shameela Yoosuf Ali
2014 Sep 19th

Wednesday, September 2, 2015

இரவுகள் விரும்பப்படுகின்றன.



Shameela Yoosuf Ali

ஒரு களைப்பூட்டும் நாளின் கரையோரம் இரவு.

நாள் முழுதும் சக்கரமோடிய ஒரு பெண்இரவின் மடியிலாவது கண்ணயர முயற்சிக்கிறாள்.

அவமானங்கள் கூர்முள்ளாய் உறுத்திய கணங்கள் இரவுக்குள் பூட்டப்படுகின்றன.





எங்கோ ஓர் மூலையில் ஒரு ஆண் ரகசியமாய் அழுது கொள்கிறான்.

குழந்தைகள் கனவில் சுவர்க்கத்தைக் கண்டு சிரிக்கிறார்கள்.

ஒரு எழுத்து இராட்சசி அப்போது தான் எழுந்து கொள்கிறாள்.

கன்னிப்பெண் வருங்காலக் கணவனைக் கற்பனை செய்கிறாள்.

முதிர்கன்னியோ கன்னத்தின் கடைசி கண்ணீர் கோட்டை இரவின் சுவரில் வரைகிறாள்.

மனித மனதின் ஏமாற்றங்கள் ஒரு தூக்கத்துக்குள் அடங்கிவிடுகின்றன.

இரவு வரும் போது பெருமூச்சுகள் வருகின்றன.

ஏதோ ஒரு நிம்மதியில் இறுக மூடுகின்றன விழிகள்.

2014.May 19
9.47 pm
By Shameela Yoosuf Ali

Tuesday, September 1, 2015

ஒரு நாட்குறிப்பும் ஒரு பாடலும்.


Shameela Yoosuf Ali

என்றேனும் ஒரு பொழுதில்
மரணத்தின் பின்னரானதொரு பெருவெளியில்
என் நாட்குறிப்பை
நீங்கள் வாசிக்கக் கூடும்…



இவளுக்குள் இத்தனை திமிரா
என நீங்கள் திகைத்தல் கூடும்.
பாடவியலாமலே வாழ்ந்திருந்ததென் பாடலொன்றினை
அதற்குள் நீங்கள் கேட்கலாம்.

வெளிக்காற்றைச் சுவாசிக்காமலே இறந்து போனெவென்
குழந்தையின் துள்ளலை நீங்கள் ரசிக்கலாம்.
பச்சை என்று சிவப்பு என்றும்
நீங்களெல்லாம் பொதுமைப்படுத்தும் ஆறாயிரத்தொரு நிறங்களின்
தனிப்பெயர் வரிசைகளை நீங்கள் சந்திக்கலாம்.

எனக்குள் முளைத்துக் கிடந்த விருட்சத்தினளவை
தனக்குத்தானே தண்ணீர் தயாரிக்கும் வேர்களின் தினவை
நீங்கள் வியக்கக்கூடும் அல்லது வெறுக்கவும் கூடும்.

‘நான்’ என நீங்களறிவது நானன்று
நீங்கள் அறியாத ‘நான்’ என் நேசிப்புக்குரியவளெனினும்
உங்கள் ஜீரணத்துக்குரியவள் அன்று.

என்றேனும் ஒரு பொழுதில்
மரணத்தின் பின்னரானதொரு பெருவெளியில்
என் நாட்குறிப்பை
நீங்கள் வாசிக்கக் கூடும்…
அது வரை
உங்களுக்கான ‘நான்’ ஆக நான் வாழ்ந்தாக வேண்டியிருக்கிறது.

2011 September 22
Copyrights@Shameela Yoousuf Ali