Friday, May 22, 2015

உம்மாவைப்பற்றி ஆயிரம் சொல்ல இருக்கின்றன



Shameela Yoosuf Ali

உம்மா அந்த ஒற்றை வார்த்தை போதும். 

ஆயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்தாலும் அந்த நேசத்தின் கதகதப்பை உள்ளம் உணர்கின்றது.

உம்மாவின் தேநீரின் சுவைக்கு உலகின் எந்த மூலையிலும் இன்னோர் இணை கண்டதில்லை.

பசிக்கவில்லை என்று படுத்துக் கொண்டாலும் பால் குவளையோடு வந்து நிற்கும் பரிவுக்கு நிகரேது?

உம்மாவின் கனவுகளை எங்களது கனவுகளுக்காக குர்பானி கொடுத்திருப்பதை ஒரு போதும் அவர் சொல்லிக் காட்டியதில்லை; ஆனால் புரிந்து கொள்கிறேன்.

உம்மாவின் அழகு போல் எவருமே இல்லை;ஆண்டுக்ளின் நீட்சியால் களவாட முடியாத பேரழகு.

நாமெல்லாம் படிக்க வேண்டும் என்பதில் அவர் காட்டிய தீவிரமும் வேட்கையும் இப்போது நினைத்தாலும் பிரமிக்க வைக்கிறது.

இன்று என் உம்மா ஒரு எழுத்தாளர் என்பது மறக்கடிக்கப்பட்டிருக்கலாம்;ஆனால் என் ஒவ்வொரு எழுத்தின் பின்னாலும் உம்மாவுக்குள்ளிருந்த ஒரு அக்கினிக் குஞ்சு கனன்று கொண்டிருக்கிறது.

உம்மாவின் மாணவிகள் அவர் மீது காட்டும் அதீத பாசம் நெகிழ வைக்குமளவு விசேசமானது. அவரது கிராஅத்தின் தேர்ந்த இனிமையையும் எழுத்தணிகளின் நேர்த்தியையும் உம்மாவிடம் கற்றவர்கள் பேசக் கேட்டிருக்கிறேன்.

உம்மா மீண்டும் எழுத ஆரம்பிக்க வேண்டும்; இது என் ஆசை.

உம்மாவைப்பற்றி ஆயிரம் சொல்ல இருக்கின்றன; அவற்றையெல்லாம் பகிரங்கமாக சொல்லிவிடமுடியாது.சில அந்தரங்கங்கள் அந்தரங்களாகவே இருந்துவிட்டுப் போகட்டும்.

பதிவை வாசிக்கும் போது உங்கள் உம்மாவின் ஞாபகம் கட்டாயம் உங்களுக்கு வந்திருக்கும்.

உம்மா தேக சுகத்துடனும் தெம்புடனும் திடத்துடனும் நீண்ட காலம் வாழ வேண்டும்; உங்கள் உம்மாவும் கூட.

பிரார்த்தனைகள்

சமீலா யூசுப் அலி
2015 May 10

No comments:

Post a Comment