Saturday, September 5, 2015

உங்களுக்குமொரு வீடுண்டா?


Shameela Yoosuf Ali

வீடுகளுக்கு உயிருண்டா அறியேன்
சுவர்களில் காதைப் பொருத்துங்கள்
உயிர் ததும்பும் இளஞ்சூட்டினை உணர்கிறேன்.

நேசம் மிகுந்ததோர் மனிதனைப் பிரியும் போதான வேதனை போன்றோ
அல்லது அதை விட கொஞ்சம் குறைவாகவோ
வீடுகளை விட்டுச் செல்லும் போதெற்படும் வெறுமை உறுத்துகிறது.


பயணங்களில்...
அந்துவான வெளிகளில் தனித்திருக்கும் வீடுகளைப் பார்க்கும் போது
இலேசான பதட்டம் தொற்றிக் கொள்கிறது.

ஒரு காலத்தில் சிண்டும் நண்டுமாய் மிதிபட
இண்டு இடுக்கெல்லாம் கலகலப்பு சிந்திக் கிடந்த வீடுகளின்
இப்போதைய மெளனம் தாங்கொணாமல் விரைவில் வீடு திரும்புகிறேன்.

வீடுகள் தனித்துவமானவை.
சில வீடுகளை கண்டவுடனேயே பிடித்துப் போகின்றன.
சிலவற்றை எப்போதுமே பிடிக்காமல் போய் விடுகின்றன.

முஸல்லாவில் தலை வைத்து இறைவனுடன் சண்டை பிடிக்கும்
தொழும் மூலை.
சின்னக் கோபங்களில் அறைந்து சாத்தப்படும் வலி சுமந்த அறைக்கதவுகள்.
குளிக்கின்ற தனிமையில் சிரித்து வைத்து சாயம் மங்கிய கண்ணாடியைத் தாங்கியிருக்கும்
வெதுவெதுப்பான குளியலறை.
தாளிதங்களின் வாசனைகள்,அடிப்பிடித்த சோறு எண்ணெய் சித்திரங்கள் வரைந்த அடுப்பங்கரை
கொண்ட சமையலறை.
மன்னிக்கவும் சகலதுக்குமான அறை.

அதிகாலையில் யன்னல் திறக்க ஊவென்று உட்புகும் கூதல் காற்று
அடுப்பில் தேநீருக்காய் கொதிக்கும் கேத்தல் சூடாய் சுவாசிக்க
மேலெழும் கதகதப்பான ஆவி...

நாள் முழுக்கக் களைத்து உள்நுழையும் போது
கால் நீட்டி புத்தகமும் கோப்பிக் கோப்பையுமாய்
சிறுதுயில் கொள்ளும் வரவேற்பறை.

யன்னல் சடசடக்க நீலமும் ஊதாவுமாய் வானம் பார்த்து டயறி எழுதும்
மேற்கு மூலை.

நிலாக்காயும் முன்னிரவுகளில் வலுக்கட்டாயமாய் விரிந்திருக்கும் நட்சத்திரங்கள் பதித்த
ஆகாயம் படர்ந்திருக்கும் படுக்கையறை.

தனிமையாய் இருக்க நினைக்கும் நொடிப் பொழுதுகளில் அரவங்கள் அற்றதாய்
வரவேற்கும் ஆளில்லாத வீடு.

ஒரு வீட்டைப் பிரியும் போது வலிக்கிறது.
அது சொந்தமாய்த் தான் இருக்க வேண்டுமா..
கூலி வீடாய் இருந்தால் கூட வலிக்கிறது.

நினைவுகளின் வேர்கள் படர்ந்திருக்கும் சுவர்களையோ
துக்கம் தொண்டை அடைக்கும் கண்ணீர்த்துளிகளையோ
சந்தோஷப் பொழுதுகளின் ஆனந்தச் சிணுங்கல்களையோ
பெயர்த்துச் செல்ல முடியாத இயலாமை
நிரம்பவும் வலி தருகிறது.

2014 November 3
By shameela Yoosuf Ali

No comments:

Post a Comment