Saturday, May 31, 2014

காசு சம்பாதிக்கும் பெண் திமிர்கொண்டவள் – சில பகிர்வுகள்


Shameela Yoosuf Ali

பெண் உழைக்கலாமா கூடாதா என்று கருத்து வேறுபாடுகளைத் தாண்டி உலகம் வளர்ந்து மிக நீண்ட காலமாயிற்று.

ஒரு முஸ்லிம் பெண் காசுக்கு வேலை பார்த்தல் ஆகுமா என்ற ஐயம் இன்னும் சிலரது உள்ளத்தில் இல்லாமல் இல்லை.

பணிபுரிதல் என்பது அத்தியாவசியமான போது மட்டுமே என்று பரவலாகச் சொல்கிறார்கள்.அத்தியாவசியமா அநாவசியமா என்பதை அந்தப் பெண்ணும் அவள் சார்ந்த குடும்பமும் மட்டுமே தீர்மானிக்க முடியும்.

ஒரு துறையில் தேர்ச்சி பெற்ற பெண், அந்தத் துறைக்கான பங்களிப்பை வழங்கியாக வேண்டியது அவசியம்;அதற்கான ஏற்பாடுகளை அவளது குடும்பமும் சமூக அமைப்பும் செய்து ஆக வேண்டும்.

குடும்பத்தை ஒழுங்காகப் பராமரித்து முடித்த பின்னர் தான் தொழிலுக்குச் செல்லாம் என்று பலர் கூறலாம்.குடும்பத்தைப் பரமாரிப்பது என்பது இடையறாத ஒரு வேலை.அதில் மனைவிக்கு மட்டுமல்ல கணவனுக்கும் பங்கிருக்கிறது என்பது புரிதலுக்குரியது.

குடும்பத்தையும் தொழிலையும் ஒரே நேரத்தில் திறம்பட நிர்வகிக்கும் ஆற்றல் பெண்களுக்கு நிச்சயமாக இருக்கிறது. ஒரு குடும்பம் என்றால் ஆயிரமிருக்கும்.அதில் கணவனும், மனைவியும் ஒருவருக்கொருவர் புரிந்துக்கொண்டு, ஒருவரது வேலையை இன்னொருத்தர் செய்ய உதவலாம். இதற்கு அழகிய உதாரணம் இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தம் மனைவிமார்களிடம் வீட்டு வேலைகளில் எவ்வளவு உதவியாக இருந்தார்கள் என்பது.

இப்போதெல்லாம் ஒரு தேநீர் ஊற்றக் கூட தெரியாது என்று கணவர் ஒதுங்குவதும்,ஒத்தாசை செய்வதை அவமானமாகக் கருதுவதும் ஒரு பெருமையாகி விட்டிருக்கிறது.

எல்லாப் பெண்களும் வேலை செய்ய வெளிச்செல்லத் தான் வேண்டும் என்பதில்லை.வீட்டிலிருந்து கூட பணிபுரியலாம். தமது திறமைகளையும் ஆற்றல்களையும் வளர்த்துக் கொள்ள விரும்பும் மகளிரும் தனக்கென்றோரு பொருளாதார சுதந்திரத்தை ஆசிப்பவர்களும் தொழில் செய்வதற்கு எந்தத் தடையும் கிடையாது.

தொழில் செய்யும் போது வரையறைகள் இருக்கின்றதே என்ற உங்கள் ஆதங்கம் புரிகிறது; ஹலாலான தொழில்,நேர்மை,நம்பிக்கை மற்றும் நாணயமாக நடந்து கொள்தல் போன்றவை தொழில் செய்யக்கூடிய அனைவரையும் கட்டுப்படுத்தக் கூடிய வரையறைகள் தான்;அதில் இரு கருத்துக்கு இடமில்லை.மற்றப் படி இஸ்லாம் கூறுகின்ற அழகிய வாழ்வியலை நடைமுறைப்படுத்துவது பணிபுரிவதற்காக வெளிக் கிளம்பும் போது மட்டுமல்ல ,வாழ்வின் அனைத்துக் கட்டங்களிலும் கடைப்பிடிக்க வேண்டியதாகும்.

இஸ்லாமிய வரலாற்றின் தாய் அன்னை கதீஜா(ரலி) அவர்கள் மிகப்பெரும் வர்த்தகத்தை கொண்டு நடாத்திய ஒரு வெற்றிகரமான வியாபாரத் தலைவி(Business Woman).நபி முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு உறுதுணையாய் இன்னுமொரு தோளாய் இருக்க அந்தத் தொழில் அவருக்கு தடையாக இருக்கவில்லை;மாற்றமாக தன் செல்வம் கொண்டு துணைவரை திடப்படுத்துபவராகவே அவர்கள் இருந்தார்கள்.

காசு சம்பாதிக்கும் பெண் திமிர்கொண்டவள் என்று கருத்து சமூகத்தில் இருக்கிறது.நான்கு காசு சம்பாதித்தால் தலை கால் புரியாது;கணவனை மதிக்க மாட்டாள் என்ற அநாவசியமான பயங்களும் இல்லாமலில்லை.காசு சம்பாதிக்காமலே ஆணவம் கொள்ளும் பெண்களும் மதிக்காத மகளிரும் தாரளமாய் இருக்கிறார்கள்.இவை தனிமனித இயல்பு சார்ந்த பண்புகள் மாத்திரமே.

வீட்டிலிருந்தோ வெளியில் சென்றோ தனது கையால் உழைப்பதில் ஒரு சந்தோஷம் இருக்கிறது;இறைவனுக்காக நேர்மையாக உழைக்கும் போது காசுக்கு மேலால் ஒரு ஆத்ம திருப்தி ஆட்கொள்கிறது. தன் காலில் நிற்கும் போது தன்னம்பிக்கை வளர்கிறது.

தன் பெற்றோருக்கு ஏதாவது தன் காசால் வாங்கிக் கொடுக்கும் சந்தோஷம் வேறு;கணவன் காசிலிருந்து வழங்குவது வேறு.
நினைக்குப் போதெல்லாம் தருமம் செய்யவும் சமயங்களில் கணவனுக்கும் வீட்டுக்கும் செலவளிக்கவும் ,நண்பிகள் உறவினர்களுக்கு சின்னப் பரிசுகள் வழங்கவும்,தனக்குத் தேவையான சில பொருட்களை சுயமாகவே வாங்கிக் கொள்ளவும், தன் திறமைகள் உபயோகப்படுவதற்கான வாய்ப்புக் கிடைப்பதும் உழைக்கும் பெண்ணின் சிறு மகிழ்ச்சிகள்.

பல ஆண்களைக் கூட ஒரு பெண் நிர்வகிக்கலாம் என்பதற்கு சிறந்த உதாரணம் ஷிஃபா பின்த் அப்துல்லாஹ் அவர்கள். அன்றைய காலகட்டத்தில் மதினா ஒரு மாபெரும் வணிக மையமாகத் திகழ்ந்தது. உமர் பின் கத்தாப்(ரலி) அவர்கள் மதீனத்துச் சந்தைக்கு ஷிஃபா பின்த் அப்துல்லாஹ் அவர்களை தலைவராக நியமித்தார்கள். ஷிஃபா (ரலி) அவர்கள் அதிக அறிவுக் கூர்மையுடையவர் மற்றும் தூர சிந்தனையுடையவர். அவரது ஆலோசனைகள் உமர்(ரலி) அவர்களுக்குப் பலசமயங்களில் உதவிகரமாக அமையப்பெற்று அதிக லாபத்தையும் ஈட்டித்தந்தன.

பெண்களின் பங்களிப்பின்றி மீண்டுமோர் மதீனா பற்றிக் கனவு கூடக் காண முடியாது.சிந்தனைகளை அகலப்படுத்துவோம்.


By Shameela Yoosuf AliEngal Thesam 2014

1 comment: