Tuesday, May 6, 2014

இல்லாமல் போன ஏதோ ஒன்று.


Shameela Yoosuf Ali


இரவினில் வைத்து,அரைவாசி முகத்திலும் அப்பியிருக்க விழிக்கும் , நுணி விரல்களில் ரத்தமாய் சிவக்கும் அரைத்த மருதாணியின் மகிழ்ச்சி,கடையில் வாங்கி உள்ளங்கையில் வைத்த உடனே சிவக்கும் உடனடி மருதாணியில் வராமல் போகிறது.

பிள்ளைப் பருவத்தில் சீத்தைத் துணியில் உம்மா தைக்கும் சட்டை அணியும் போது கிளர்ந்தெழும் பெருநாள் குதூகலம், பல ஆயிரங்கள் கொண்டு பட்டாய் நெகிழும் விலையுயர் ஆடையை நேர்த்தியாய் அணிகையில் கிடைப்பதில்லை.

அரைகுறை வெளிச்சத்தில் ரொட்டியைத் துண்டு துண்டாய்ப் பிய்த்து ,சுடு இறைச்சியும் ஆணமுமாய் மணக்கத் தின்றதன் ஆனந்தம் குளிரூட்டிய உணவகத்தில் பக்குவமாய் படைக்கும் வகை வகை உணவுகள் முள்கரண்டியால் உட்கொள்கையில் இல்லாமலாகி விடுகிறது.

காற்றுப்படபடக்க மழைத்துளிகள் வர்ஷிக்க இனிக்கப் பறக்கும் இருசக்கர மோட்டார்ப் பயணம் போல் வாய்ப்பதில்லை ஆடம்பர வாகனத்தில் காற்றுப்புகா உள்ளுக்குள் சொகுசு இருக்கைப் பயணம்.

நிலாக்கால முன்னிரவில் ஆற்றுக் கல்லில் கதகதப்பில் நண்பியும் நானுமாய் வானம் பார்த்து படுத்துக் கிடந்த நட்சத்திரங்கள், கட்டிடடங்கள் புடை சூழ மொட்டை மாடியில் உட்கார்ந்து நிலாப் பார்க்கும் போது காணவில்லை.

மொத்தத்தில் அதிகம் இல்லாமல் இருந்த போது இருந்த ஏதோவொன்று ,அதிகம் இருக்கிற போது இல்லாமல் போகிறது என்பதைத் தெளிவாக உணர்கிறேன்.

By Shameela Yoosuf Ali
2014 May 6th

No comments:

Post a Comment