Saturday, May 10, 2014

அன்பும் காலமும்








Shameela Yoosuf Ali




முன்னொரு காலத்தில் ஒர் அழகிய தீவொன்றிருந்தது.அங்கு துக்கம்,சந்தோஷம்,அறிவு,அன்பு மற்றும் மற்ற உணர்வுகளும் வாழ்ந்து வந்தன.

ஒரு நாள் ஒரு திடீர் அறிவித்தல். அந்தத்தீவு மூழ்கப்போகிறது என்ற அதிர்ச்சித் தகவல். எல்லா உணர்வுகளும் தங்களுக்கென்று தனியான கட்டுமரம் அல்லது தோணிகளை நிர்மாணித்து அங்கிருந்து வெளியேறத் துவங்கின.

ஆனால் அன்பு வெளியேற மறுத்து விட்டது.கடைசித் தருணம் வரை அங்கிருக்க வேண்டும் என்பதே அதன் ஆசை. எல்லா உணர்வுகளும் வெளியேறி விட அன்பு மட்டுமே எஞ்சியிருந்தது.

தீவு மூழ்கத் தொடங்கியது.கடைசியாக அன்பு தன் மற்றைய நண்பர்களிடம் உதவி கேட்போம் எனத் தீர்மானித்தது.

‘செல்வச்செழிப்பு’ மிகப்பாரியதோர் சொகுசுக் கப்பலில் அன்பைக்கடந்து சென்றது
“செல்வச்செழிப்பே, என்னையும் உன்னுடன் அழைத்துச் செல்வாயா? அன்பு கேட்டது.
‘முடியாது,எனது கப்பல் ஏராளமான தங்கம் வெள்ளியினால் நிரம்பியுள்ளது,அதனால் அங்கு உனக்கு இடமில்லை’

‘அன்பு’ என்ன செய்வதென்று யோசிக்கும் போது ‘பெருமை’ மிகுந்த அழகானதோர் தோணியொன்றில் வந்தது.
‘பெருமையே,தயவு செய்து எனக்கு உதவி செய்’ அன்பு கெஞ்சியது.
‘அன்பே, எனக்கு உதவி செய்ய முடியாது, நீ நனைந்திருக்கிறாய், நீ என் தோணியை நாசமாக்கி விடுவாய்’ பெருமை பதிலளித்தது.

‘துக்கம்’ அருகில் வந்தது. அன்பு கேட்டது ‘ துக்கமே, நான் உன்னுடன் வருகிறேன்’
‘ஓ அன்பே, நான் மிகுந்த கவலையில் இருக்கிறேன், நான் தனியாக இருந்தாக வேண்டும், உன்னை அழைத்துச் செல்ல முடியாது.”
துக்கமும் மறுத்து விட்டது.

‘சந்தோஷம்’ அன்பைக் கடந்து சென்றது. ஆனால் அது தாங்க முடியாத உற்சாகத்துள்ளலில் இருந்ததால் அன்பு கூப்பிடும் குரலைக் கேட்கவேயில்லை.

திடீரென ஒரு குரல்.

‘அன்பே, இங்கு வா, நான் உன்னை அழைத்துச் செல்கிறேன்’ அது வயதில் முதிர்ந்தது. கரைபுரண்டோடிய மகிழ்ச்சியும் குதூகலத்திலும் அன்பு எங்கே போகிறோம் என்பதைக் கூட கேட்க மறந்து விட்டது.கரை தட்டி விட்டது, அன்பை விட்டு விட்டு அந்த முதிர்ந்த உருவம் சென்று விட்டது.

அன்பு மிகவும் முதிர்ந்திருந்த அறிவிடம் கேட்டது ;எனக்கு உதவி செய்தது யார்?’

அது தான் ‘காலம்’ அறிவு பதிலளித்தது.

‘காலமா? ‘ அன்பு ஆச்சரியப்பட்டது.

ஆழ்ந்த சிந்தனையுடன் ‘அறிவு’ சொன்னது ‘ காலம் ஒன்று மட்டுமே அன்பின் விலைமதிப்பில்லாப் பெறுமதியை உணர்ந்திருக்கிறது’

ஆங்கிலத்தில் யாரோ
தமிழில் சமீலா யூசுப் அலி
2013.June 11th

No comments:

Post a Comment