Saturday, June 7, 2014

அன்பை வெளிப்படுத்துவது ஒரு குற்றமா?.....

சம்பவம் 01

பல்கலைக்கழகத்தில் பட்டம் பெறும் மகன் ,பக்கத்தில் தாயும் தந்தையும் புளகாங்கிதத்துடனும் பூரிப்புடனும் நின்றிருக்கின்றனர்.பட்டம் பெற்ற மகனைப் பாராட்டி இரண்டு வார்த்தை பேச முடியாமல் உதடுகள் மெளனிக்கின்றன. மகனுக்கோ பெற்றோரைக்கட்டியணைக்க வேண்டும் போல் பொங்கிவரும் உணர்ச்சிகள் ஏனோ நீர் தெளித்த பாலாய் அடங்கிப்போகின்றன.

சம்பவம் 02

ஆஸ்பத்திரியில் பார்வையாளர் நேரம்.தன் சகோதரியின் கட்டிலருகே ஓடோடி வரும் சகோதரன். சிறிது நேரம் தாமதித்து, கொண்டு வந்த உணவுப்பாத்திரத்தை கையில் கொடுத்து சுகம் விசாரிக்கிறார். தலை தடவி விட வேண்டும் போல குறுகுறுத்த கையை மெல்ல இழுத்துக்கொண்டு விடுகின்றது ஏதோவொன்று.

சம்பவம் 03

மனைவிக்குப் பிரசவம், சுற்றிய பூப்பந்தாய் ஒரு குழந்தை அருகில்.குழந்தையைக் கொஞ்சும் கணவனுக்கு மனைவியின் கை தடவி தன் அன்பைப் பகிர மிகுந்த கஷ்டமாயிருக்கின்றது.
சம்பவம் 04

தொலைக்காட்சியில் சிறுவர்களுக்கான ஓர் ஆங்கிலத்திரைப்படம். தாய் தந்தையுடன் அமர்ந்து பார்க்கும் ஒர் ஒன்பது வயதுச் சிறுமி மற்றும் ஐந்து வயதுச் சிறுவன். படத்தில் தாயைக் கட்டியணைத்து ‘ஐ லவ் யூ’ என்று சொல்கிறான் ஒரு சிறுவன். பார்த்துக் கொண்டிருந்த சிறுமிக்கோ வெட்கம் வந்து விடுகிறது,ஓரக்கண்ணால் தாயையும் தந்தையையும் நோக்குகிறாள்.சிறுவனுக்கோ பெரும் சந்தேகம் “ஏன் என் தாய்,தந்தையர் அவ்வாறு என்னிடம் சொல்வதோ,கட்டியணைப்பதோ இல்லை’


அன்பை வெளிப்படுத்துவதை ஒரு குற்றமாகப்பார்க்கும் நம் சமூகத்தின் நிலையின் ஒரு சில துளிகளே மேலே கண்டவை.
கண்ட கண்ட இடத்தில் கண்களே கூசுமளவுக்கு ஆபாசமாக அன்பை வெளிப்படுத்தும் மேலைத்தேய வழக்கம் ஒரு புறம்; மறுபுறம் அன்பை வெளிப்படுத்துவதை ஆபாசக்கண் கொண்டு நோக்கி பதுங்கிக் கொள்ளும் கீழைத்தேய சமூகம்.

உங்கள் சகோதரருடன் உங்களுக்கிருக்கும் அன்பை வார்த்தைகளாலும் பகிரங்கப்படுத்துங்கள் என்ற நபிவழி வந்த வாரிசுகள் நாம்.ஆனால் இன்று சமூகத்தின் வரட்டு வேதாந்தங்களுக்கு செவிசாய்த்ததன் விளைவாகவும், வழமைக்கு மாறாக எந்த புதுவித வித்தியாசத்தினையும் செய்யக்கூடாது அது நன்மையாக இருந்த பட்சத்திலும் கூட, என்ற அதீத பிடிவாதத்தின் காரணமாகவும் நாம் நடந்து வந்த சுவடுகளை மறந்து விட்டிருக்கிறோம்.

மனிதனின் புலன்களில் தொடுகை என்ற உணர்வு பிரதானமான ஒன்று. ஆயிரம் வார்த்தைகளால் தர முடியாத ஆறுதலை ஒரு அழுத்தமான தழுவலால் தர முடியும்.
சில நேரங்களில் வார்த்தைகள் கட்டாய மெளனத்துக்குள்ளாகின்றன; அப்போதெல்லாம் உடல்களுக்கிடையிலான தொடர்பாடல் தான் சாத்தியப்படுகிறது. இதனால் தான் சமூக விஞ்ஞானத்திலும் உளவியலிலும் உடல் மொழி எனப்படுகின்ற Body Language க்கு மிகுந்த முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.

எமது கலாச்சாரத்தில் இந்த அன்பை மொழிமூலம் வெளிப்படுத்துவதும் தொடுகை மூலம் வெளிப்படுத்துவதும் வெட்கம் தரக்கூடிய விடயமாகவும் சமயங்களில் தரக்குறைவான அம்சமாகவும் பார்க்கப்படுகின்றது.
இலங்கை போன்ற மூன்றாம் உலக நாடுகளில், காதல் அல்லது அன்பைக்குறிக்கும் லவ் என்ற ஆங்கிலச்சொல் முடியுமான அனைத்து வகையிலும் வர்த்தகமயமாகிவிட்டது. ஆண் பெண் இடையில் துளிர்த்து வளரும் எதிர்பால் ஈர்ப்பையே இங்கு அந்தச் சொல் அர்த்தப்படுத்துகின்றது என்பதே அனேகரின் அகராதி. நான் உங்களை மிகவும் விரும்புகிறேன் அல்லது ஐ லவ் யூ என்ற வார்த்தைகளை உதடுகளால் நம் பெற்றோர்களுக்கு அல்லது குழந்தைகளுக்கு உணர்ச்சிபூர்வமாக எம்மால் ஏன் உச்சரிக்க முடியாதுள்ளது?

அன்பை பரிமாறுவதை அதை வாய் விட்டு உரியவருக்குத் தெரிவிப்பதை உற்சாகப்படுத்தும் இஸ்லாத்தின் பெயரைக்கூறிக் கொண்டே அதை நாம் ஒரு வெறுக்கத்த விடயமாக மாற்றியிருக்கிறோம்.
இன்று விரிசலடையும் குடும்ப உறவுகளை மீள இணைக்கும் வல்லமை வாய்ந்த அன்பின் தொடர்ச்சியிலான அரவணைப்பு, ஆறுதலளிக்கும் தொடுகைகள் ஆரோக்கியமானவை.உடலுக்கும் உள்ளத்துக்கும் சந்தோசத்தையும் சாந்தியையும், நெருக்கத்தையும் இறுக்கமான பிணைப்புக்களையும் வலுப்படுத்தும் அன்பின் வெளிப்பாடுகள் அத்தியாவசியமானவை.

சில நிமிடங்கள் சிந்தியுங்கள், இன்று உங்கள் அன்பை வேண்டி நிற்கும் அரவணைப்பைத் தேடி நிற்கும் உள்ளங்கள் எவை;தயங்காது அன்பை வெளிப்படுத்துங்கள்.இந்தப் பயணத்தின் முதலடி உங்கள் பாதங்களே.

2012.March 15th
Shameela Yoosuf Ali

No comments:

Post a Comment