Sunday, April 27, 2014

அழகு படுத்தும் பாடு


Shameela Yoosuf Ali

இயல்பிலேயே அழகு,அலங்காரம் என்பவை பெண்களுக்குப் பிடித்தமான விடயங்கள்.

தன்னை அழகுபடுத்திக் கொள்வது அற்புதமானதோர் விடயம்;அழகாக இருப்பதும் நேர்த்தியான உடைகளும் நிச்சயம் தன்னம்பிக்கையை வளர்ப்பன.

நம்மில் அனேகர் விரும்பியோ வெறுத்தோ அழகை வெள்ளை நிறத்தோடு சம்பந்தப் படுத்தியே பார்க்கப் பழக்கப் பட்டிருக்கிறோம்.தோலை உரித்தாவது அந்த நிறம் பெறுவதற்காக ஆயிரம் அழகுசாதனப் பொருட்களை பரீட்சிக்கிறோம்.சிவப்பழகுக் கிரிம்கள் அதிகம் விற்பனையாவது இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் ஆகும்.

அதிக தண்ணீர்,உடற்பயிற்சி,பழங்கள்,பச்சைக் காய்கறிகள்,தேவையான தூக்கம்,பொறாமை போன்ற மாசுகளற்ற நல்ல உள்ளம் இவை உடலுக்கு அதிக வனப்பையும் ஆரோக்கியத்தையும் தருவதில் முதன்மையான விடயங்கள்.

சமீப காலமாக குறிப்பாக எமது முஸ்லிம் சமூகப் பெண்களிடையே வட இந்திய சினிமா அல்லது சின்னத்திரை நாடகங்களின் பாதிப்பின் வெளிப்பாடுகளை அவதானிக்கலாம்.உடையிலும் முகத்தில் அப்பியிருக்கும் மேக் அப் பூச்சுக்களிலும் பல பெண்களின் சுயம் தொலைந்து விட்டிருக்கிறது.யாரோ ஒருவரைப் போன்று ஆக வேண்டும் என்ற ஆசையில் மிதமிஞ்சிய கண்மூடித்தனமான அலங்காரங்களில்,எளிமையான அழகும் இனிமையும் தொலைந்து விட்டிருக்கின்றன.

இதே போன்று எமது சமூகப் பெண்களின் அபாயா மற்றும் ஹிஜாப் உடைகளின் தேர்வும் அணியும் முறையும் முழுக்க முழுக்க மத்திய கிழக்கின் தழுவலாக மாறி விட்டிருக்கிறது.உயர்த்தி விட்ட கொண்டைகளும் வீதியில் இழுபடும் உடைகளுமாய் இந்த பெஷன் வளர்கிறது.

தனது சுயம்,செய்யும் தொழில்,பணி மற்றும் தேவைகளின் நிமித்தமான ஹிஜாப் உடைக்குப் பதிலாக ஏதோவொரு கலாச்சாரத்தின் தழுவலாக உடைகள் அணிவது வழக்கமாகி விட்டிருக்கிறது.

1.அழகு வேறு ஆரவாரமான அலங்காரம் வேறு.அழகை மெருகூட்டிக் கொள்வதில் பிழையில்லை;பொருத்தமற்று வலிந்து மேற்கொள்ளும் ஒப்பனைகள் செயற்கையானவை.

2.அழகுக்கும் வெள்ளைநிறத்திற்கும் நேரடி சம்பந்தம் கிடையாது.எமது உள்ளங்களில் காலங்காலமாய் வேரோடிப்போன ஒரு அசட்டு நம்பிக்கை அது.எந்த நிறமாயிருந்தாலும் சரி, மாசுக்களற்ற சருமமே அழகாய் இருக்கும்.

3.உடை தேர்வதில் தனித்துவம் தேவை.ஒவ்வொரு சூழல்,இடம்,தொழில், தேவைகளை முன்னிட்டே அந்தத் தெரிவு இடம் பெறல் வேண்டும்.

4.அழகாய் இருப்பதற்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறையும் நல்ல உள்ளமும் அத்தியாவசியமானவை.

5.ஆபரணங்களாலும் வேறு அலங்காரங்களாலும் சோடிக்கப்பட்ட பெண்களை விட அறிவாலும்,உறுதியான தன்னம்பிக்கையாலும் அலங்கரிக்கப்பட்ட பெண்களே காலத்தின் இப்போதைய தேவை.

சிந்திப்போமா???

By Shameela Yoosuf Ali
2014 April 12

No comments:

Post a Comment