Friday, April 25, 2014

கலாநிதி தாரிக் ரமழானும் ஈமானும்




தாரிக் ரமழான் அவர்களின் சிந்தனைகள் நவீன உலக அரங்கில் அதிகம், பேசப்பட்டு வருகின்றன.இஸ்லாத்தின் தூதினை அழகிய வடிவில் பல்வேறு ஊடகங்களிலும் முன்வைத்து வரும் ரமழான் அவர்கள் முஸ்லிம் சமூகம் தன்னை ஏனைய சமூகங்களிலிருந்து தனிப்படுத்திக் கொள்ளாது,தனித்துவத்தோடு சமூக முன்னேற்றத்தின் பங்காளர்களாக மாற வேண்டும் என்பதில் அதீத கரிசனை காட்டி வருகிறார்.

யாரிந்த தாரிக் ரமழான்?
இக்வானுல் முஸ்லிமூன் இயக்கத்தின் ஸ்தாபகரான ஹஸனுல் பன்னா(ரஹ்) மகள் வயிற்றுப்பேரர் தான் இந்த தாரிக் ரமழான் அவர்கள்.அவரின் தந்தை ஸஈத் ரமழான் அவர்கள் எகிப்தின் இஸ்லாமிய எழுச்சி வரலாற்றில் எழுதப்படும் பெயரும் பேறும் பெற்ற அறிஞர்.
தாரிக் ரமழான் அவர்களின் மொழிநடை கவித்துவமும் இனிமையும் பொருந்திய அலாதியான தனிநடை.பெண்களைப்பற்றிய அவரது கருத்துக்கள் கலாசாரத்தாக்கங்களினால் இழந்து போன பெண்ணின் தனித்துவத்தை பெண் சார்ந்த தூய இஸ்லாமிய சிந்தனையை மீட்டெடுக்கின்றது.

அண்மையில் அவரின் புகழ் பூத்த ‘ரடிகல் ரிபோர்ம்’ என்ற நூலை வாசித்துச் செல்லும் போது ‘இஸ்லாத்தில் பெண்கள்’ என்ற அத்தியாயத்தை அப்படியே உள்ளம் எழுதிக்கொண்டது.அல்ஹம்துலில்லாஹ்,ஒவ்வொரு ஆணும் பெண்ணின் தனித்துவத்தைப் புரிந்து கொள்ளவும் ஒவ்வொரு பெண்ணும் தன்னைப்பெறுமதியாக உணர்ந்து கொள்ளவும் அந்த அத்தியாயத்தை வாசித்தாக வேண்டும் என எண்ணுகிறேன்.

To Be A Europian Muslim என்ற அவரது மற்றொரு நூலின் நன்றியுரையின் பகுதியொன்றை ஆங்கில மூலத்தில் பேஸ் புக் இல் காணக் கிடைத்தது.அதற்கு கீழே ஒரு சகோதரி பதிந்திருந்த கருத்தும் என்னைக்கவர்ந்தது.

“எனது மனைவி ஈமான் எனக்கு வெறும் துணையாக மட்டும் இருக்கவில்லை.வாழ்க்கையின் பாதையில் சமயங்களில் எனது கருத்துக்களுக்கு சவால் விடுகிறாள்,விவாதிக்கிறாள்,கேள்விக்குள்ளாக்கிறாள்,விமர்சிக்கின்றாள்.
நீள் நெடுங்காலமாக எனது சிந்தனைகளின் முக்கியமானதொரு பகுதிக்கு மூலமாகவும் வழிப்படுத்தலாகவும் அவள் கண்ணாடியின் விம்பங்கள் அமைந்திருக்கின்றன.

இறைவனின் அன்பின் ஒரு பரிமாணத்தை என்னால் புரிந்து கொள்ளவே முடியாமலிருக்கிறது,அவன் எனக்கு வழங்கியுள்ள விலைமதிக்க முடியாத பரிசுகளான என் துணைவி,அவளது இதயம்,அவளது அறிவு மற்றும் எமது பிள்ளைகளை நினைக்கும் போது.
அவளது வருகைக்கு நன்றிகள்;அவளது பொறுமைக்கும் நன்றிகள்”

கீழே பதிந்திருந்த ஒரு சகோதரியின் கருத்து சிந்தனைக்குரியது

திருமதி ஈமான் ரொம்ப அதிஷ்டசாலி,
“வாழ்க்கையின் பாதையில் சமயங்களில் எனது கருத்துக்களுக்கு சவால் விடுகிறாள்,விவாதிக்கிறாள்,கேள்விக்குள்ளாக்கிறாள்,விமர்சிக்கின்றாள்.”
எங்களுடைய சமூகத்தில் இப்படியானவை ஒரு பெண்ணைப் பொறுத்தளவில் அவள் திருமணமாகமலிருப்பதற்கான தகைமைகளாகும்.,குறிப்பாக தங்களை மார்க்கத்தில் பேணுதலாக இருப்பதாக நினைப்பவர்கள் இப்படியான பெண்களை விரும்புவதில்லை.

உம்மு ஹனா

ஆம்,நம் சிந்தனைக்கதவுகளைத் திறந்து விடுவோமா? ஒரே புழுக்கமாக இருக்கிறது.

Shameela Yoosuf Ali
2011.10.27

No comments:

Post a Comment