Saturday, June 28, 2014

உறக்கம் கலைத்த நீள் இரவும் சில சிந்தனைகளும்









உறக்கம் வரமறுத்து உள்ளம் அடம் பிடித்தழுத அந்த நீண்ட இரவு மறக்கக் கூடியதன்று.

பேரினவாதத்தின் கொடிய கரங்களுக்கிடையில் மீண்டுமொரு முறை முஸ்லிகள் நசுங்கிய அந்தக் கணங்கள்.

இலங்கை முஸ்லிம் சமூகத்தின் அடையாளச் சின்னம் நளீமிய்யா.
நளீமிய்யா முற்றுகையிடப்பட்டுள்ளது;ஆயுதம் தாங்கிய வன்முறைக் கும்பல் வெளியே நிற்கிறது;உள்ளே ஆண்களும் பெண்களும் சின்னஞ்சிறுவர்களுமாய் அடைபட்டுக் கிடக்கிறார்கள்.நெஞ்சு பதை பதைத்து உயிருக்குள்ளால் ஒழுகத் துவங்கியது.

களுத்தறை, தர்கா நகர்,பேருவளை தொடங்கி தீயின் நாக்குகள் நாடெங்கும் பரவ கறுப்பு ஜூலை பற்றிய ஞாபங்கள் மறக்காமல் வந்து போயின.

அண்மையில் தான் கறுப்பு ஜூலை பற்றிய கட்டுரை ஒன்றினை தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழி மாற்றம் செய்திருந்தேன்.அந்த அதிபயங்கரமான அனுபவங்களின் விளைவாகத் தான் விடுதலைப் புலிகளுக்கு தமிழர்கள் ஆதரவு வழங்கினார்கள்;அந்த இடத்தில் இருந்து பார்க்கும் போது அது மிக நியாயமாகத் தான் தெரிந்தது.

எத்தனை நாளைக்குத் தான் அடிமை வாழ்வு வாழ்வது,குறைந்த பட்சம் தற்காப்புக்கான ஏற்பாடுகளாவது தேவை என்று மக்கள் உணர்ந்திருப்பார்கள்.

ஒரு போதும் ஆயுதப் போராட்டத்தை என்னால் முழுமையாக நியாயப் படுத்த முடியாது;எனினும் அழிக்கப்படுபவன் எழுந்து போராடுவதைப் பற்றியும் எனக்கு இருகருத்து கிடையாது;அவன் எந்த இனம் சார்ந்தவனாக இருந்தாலும் சரியே.

முள்ளிவாய்க்காலில் நம் சகோதர தமிழினம் துடைத்தெறியப் பட்ட போது மெளனம் காத்தோம்.எவருக்கோ வந்த விருந்து நமக்கெதுக்கு என்று வாளாவிருந்தோம்.

மெளனம் ஒரு கையாலாகாத நிலை
மட்டுமன்று;மெளனம் ஒரு துரோகம்;மெளனம் ஒரு காட்டிக் கொடுப்பு.

அடக்குமுறையின் போது மெளனிப்பதன் வேதனையை இன்று சர்வநிச்சயமாக உணர்கிறோம்.

ஊடகங்கள்,அரசு,அரசிலுள்ள முஸ்லிம் அமைச்சர்கள், பெரும்பான்மைத் தோழர்கள் என நீளும் இந்த மெளனத்தின் அடர்த்தி வேதனையையும் விசனத்தையும் அதிகரிக்கின்றது.

மிகப்பெரிய பயங்கரம் மோசமான மனிதர்களின் அடக்குமுறைகளோ குரூரங்களோ அல்ல;நல்ல மனிதர்கள் அந்த அடக்கு முறைகள் மீதும் குரூரங்கள் மீதும் காட்டும் மெளனம் தான்” சொன்னவர் மார்டின் லூதர் கிங்

தீமைகள் நடக்கட்டும் என வாளாவிருப்பதும் ஒரு வகையில் அந்த அநியாயங்களுக்குத் துணை போவது போன்றது தான்;ஏனெனில் மறைமுகமாக அந்த அடக்குமுறையை நீங்கள் ஏற்றுக் கொண்டுள்ளீர்கள்;அதே வேளை அந்த அநீதியானது ,அதற்கெதிராகப் பேசுமாறோ அல்லது அதற்கெதிராகச் செயற்படுமாறோ உங்களை ரோஷமுறச் செய்யவுமில்லை.

இஸ்லாம் அமைதியின் மார்க்கம்.அமைதியின் அர்த்தம் உன் உள்ளங்காலுக்குக் கீழே நிலம் நழுவிக் கொண்டிருக்கும் போதும் பேசாமலிருப்பது அல்ல.
அதே நேரம் அநியாயம் செய்யப்பட்டவருக்கு நியாயம் கிடைத்தாக வேண்டும்;அவர் ஒரு பெளத்தராக,இந்துவாக அல்லது கிரிஸ்தவராக இருக்கலாம்.

ஒரு மதத்துக்கோ அல்லது இனக்குழுவுக்கோ எதிராகவல்ல; அடக்குமுறைக்குகும் அட்டூழியத்திற்கும் எதிராக போராடுவதே அத்தியாவசியமானது;அது ஒரு முஸ்லிமின் பண்பும் கூட.

நம் கையால் நடக்கும் தவறுகளை நாமெல்லாம் முஸ்லிம்கள் என்று மறைக்கும் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் உள்ளங்கள் நமக்கு வேண்டாம்.
இனியாவது அநீதிகளுக்கெதிராய் குரல்களை உயர்த்துவோம்.

அது அரசாக இருந்தாலும் சரி,ஊடகங்களாக இருந்தாலும் சரி,நாம் சார் இயக்கங்களாக நிறுவனங்களாக இருந்தாலும் சரி பொது பல சேனா போன்ற கடும்போக்கு அமைப்புக்களாக இருந்தாலும் சரி.,குற்றம் குற்றமே.

அடுத்தாக பெளத்த மதம் சார்ந்த எல்லோரையும் குரோதம் கொப்புளிக்கும் கண்களுடன் பார்க்க வேண்டாம்;அன்றாடம் நாம் பழகும் பேசும் ஒன்றாக வேலை பார்க்கும் பல சிங்கள சகோதர சகோதரிகள் இந்த வன்முறைகளுக்கெல்லாம் அப்பாற் பட்டவர்கள்.

எல்லோர்க்குள்ளும் ஒரு மிருகம் இருக்கிறது; அதற்கு இறைச்சி காட்டித் தூண்டி விடும் கைங்கரியத்தை சில தீவிரவாத அமைப்புக்கள் செய்கின்றன.

உணர்வுகள் தூண்டிவிடப் படும் போதும்,தனிநபர்கள் சேர்ந்து கும்பலாகும் போதும் மூளை மரத்துப் போய் விடுகிறது;நடுநிலையாககச் சிந்திக்கும் திறன் செத்தழிந்து விடுகிறது.

பெளத்தம் அகிம்சையின் இல்லம்;இந்தத் தாக்குதல்களுக்கு முதலில் இலக்காகியிருப்பது பெளத்த மதத்தின் அமைதிக் கொள்கைகள் தான்.மதங்களை நிந்திப்பது ரசூல் ஸல் அவர்களின் முன்மாதிரிகளுக்கு நேரெதிரானது.

ஒரு முயலைச் சிங்கமாகவும் ,சிங்கத்தை முயலாகவும் சித்தரிக்கக் கூடிய வல்லமை ஊடகங்களுக்கு உண்டு.அரசு சார் ஊடகங்களெல்லாம் கை கட்டி வாய் பொத்தி மெளனிக்க இணைய வழியே உண்மையான தகவல்கள் வெளித்தெரிய வந்தன.இவற்றில் ஃபேஸ்புக் டிவிட்டர் போன்ற சமூக ஊடகங்களின் பங்களிப்பு மகத்தானது.

Citizen Journalism எனும் பிரஜா ஊடகவியலின் பிரதான களமாக சமூக ஊடகங்கள் திகழ்ந்தன.இணைய இணைப்புக் கொண்ட எவரும் தங்கள் கருத்துக்களை உடனுக்குடன் பகிர்ந்து கொள்ளும் போது அவர்கள் பிரஜா ஊடகவியலாளர்களாகின்றனர்.

எனினும் சமயங்களில் வதந்திகள் காட்டுத் தீ போலப் பரவவும் இதே பிரஜா ஊடகவியலாளர்களின் அனுபவமின்மையும் பொறுப்பற்றதன்மைகளும் காரணமாய் அமைந்ததையும் மறுக்க முடியாது.செய்திகளின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தாமல் அதை மற்றவர்களுக்கு எடுத்துச் செல்வது பற்றி நாமனைவரும் இரண்டு தரம் யோசிக்க வேண்டும்.

அல்குர்ஆன் 29:2. “நாங்கள் ஈமான் கொண்டிருக்கின்றோம்” என்று கூறுவதனால் (மட்டும்) அவர்கள் சோதிக்கப்படாமல் விட்டு விடப்படுவார்கள் என்று மனிதர்கள் எண்ணிக் கொண்டார்களா?

அல் குர்ஆன் 57:22. பூமியிலோ, அல்லது உங்களிலோ சம்பவிக்கிற எந்தச் சம்பவமும் - அதனை நாம் உண்டாக்குவதற்கு முன்னரே (லவ்ஹுல் மஹ்ஃபூள்) ஏட்டில் இல்லாமலில்லை; நிச்சயமாக அது அல்லாஹ்வுக்கு மிக எளிதானதேயாகும்.

நடந்த சம்பவங்களிலிருந்து பெறக் கூடிய படிப்பினைகளோடும் ஆழ்ந்த சாணக்கியத்தோடும் உணர்வுகளுக்கு மேலால் அறிவிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் மனோநிலையோடும் முன் செல்வோம்.

சமீலா யூசுப் அலி

http://shameela2014.blogspot.com/
https://www.facebook.com/Shameela2013

No comments:

Post a Comment